கவலைகள் தீர்க்கும் கார்த்திகை மாத ராசி பலன்கள்

Loading...

மேஷம்

“தண்ணீர் வெந்நீரானாலும் தளிர்ந்தெரியும் நெருப்பை அவிக்கும்” என்ற முதுமொழியை அறிந்த நீங்கள், நாலு காசு சம்பாதிக்க கடல் கடந்து போனாலும் பாரம்பரியம், பண்பாட்டை மீறாதவர்கள்.

ராசிநாதன் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் தொடங்கியதை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வழக்கு சாதகமாகும்.

raa

சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஓடிவந்து உதவுவார்கள். பழைய கடனைத் தீர்க்க புதுவழி யோசிப்பீர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதால் பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும்.

எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். மனைவி வழி உறவினர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். வீட்டிற்கு கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைக்கும் முயற்சி பலிதமாகும். லோன் கிடைக்கும். என்றாலும் குரு 6ல் மறைந்திருப்பதாலும், 8ல் சனி தொடர்வதுடன் இந்த மாதம் முழுக்க சூரியனுடன் அமர்ந்திருப்பதாலும் எந்த விஷயத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர்கள்.

பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். நீங்களும் அவர்களுக்கு சரிசமமாக சண்டை போட்டுக் கொண்டிருக்காதீர்கள். விட்டுப் பிடிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை தூக்க வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். சில நாட்கள் தூக்கம் குறையும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள்.

அரசியல்வாதிகளே! தகுந்த ஆதாரமில்லாமல் எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேச வேண்டாம். உட்கட்சிப் பூசல் வெடிக்கும்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். பெற்றோருடன் கலந்தாலோசித்து சில புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

மாணவ மாணவிகளே! மந்தம், மறதி வந்து நீங்கும். ஆசிரியரிடம் சந்தேகங்களை கேட்கத்தயங்காதீர்கள்.

வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டாகும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். கடன் வாங்கி கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். பங்குதாரர்கள் உங்களை தவறாகப் புரிந்து கொள்வார்கள். புரோக்கரேஜ், துணி, அழகு சாதனப் பொருட்களால் ஆதாயமடைவீர்கள்.

உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். ஆனாலும், மூளை பலத்தால் மூத்த அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள்.

கலைத்துறையினரே! தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளிவரும்.

விவசாயிகளே! மாற்றுப் பயிரிடுங்கள். நீர்வளம் கிட்டும். பம்புசெட் பழுதாகி சரியாகும். அஷ்டமத்துச் சனியாலும், சகட குருவாலும் சின்னச் சின்ன இழப்புகளை சந்தித்தாலும் ராசிநாதன் செவ்வாயின் பலத்தால் திடீர் திருப்பங்களை சந்திக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: நவம்பர் 16, 17, 18, 24, 25, 26, 27, டிசம்பர் 4, 5, 6, 7, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 28ந் தேதி மாலை மணி 3.20 முதல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலிலுள்ள வாராஹி அம்மனை தரிசியுங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

ரிஷபம்

கருமத்தால் வந்தவற்றைத் தருமத்தால் தொலைக்க வேண்டும்” என்ற பழமொழியை அறிந்த நீங்கள், முற்பிறவி சூட்சுமத்தை உணர்ந்து, இப்பிறவியில் எந்தப் பழிபாவமும் வராதபடி தர்மத்தின் வழியில் நடப்பவர்கள். குருபகவான் 5ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் தோன்றும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

கௌரவப் பதவிகள் தேடி வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே, நல்ல பதில் வரும். எதிர்ப்புகள் குறையும். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் வந்தமையும். உங்களின் சப்தமாதிபதி செவ்வாய், சாதகமான வீடுகளில் சென்றுகொண்டிருப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவி வழியிலும் மதிப்பு கூடும். வழக்குகள் சாதகமாக முடியும்.

நகர எல்லையை ஒட்டிய பகுதியில் வீட்டுமனை வாங்குவீர்கள். சகோதரங்கள் உங்களுடன் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், 7ல் நிற்கும் சனியுடன் இந்த மாதம் முழுக்க சூரியனும் தொடர்வதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, அடி வயிற்றில் வலி, முன்கோபம் வந்து செல்லும்.

மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, மூட்டு, இடுப்பு மற்றும் தலைவலி வந்துபோகும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடும் முன் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. உங்கள் ராசிநாதனான சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர், புதிதாக வீடு வாங்க முயற்சி செய்வீர்கள்.

25ந் தேதி முதல் உங்களின் தன, பூர்வ புண்யாதிபதியான புதன் சனியை விட்டு விலகுவதால் குழப்பங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும்.அவர்கள் கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவார்கள். சொந்தபந்தங்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

அரசியல்வாதிகளே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். கட்சியின் மேலிடம் உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைக்கும்.

மாணவ, மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். வகுப்பறையில் சகமாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். சிலர் தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புதுத் திட்டங்கள், விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வாகன உதிரி பாகங்கள், சிமென்ட், துணி வகைகளால் லாபம் பெருகும். பங்குதாரர்கள் தங்களின் பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள்.

உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களின் ஆதரவால் தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். என்றாலும், உத்யோக ஸ்தானத்தில் கேது தொடர்வதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.

கலைத்துறையினரே! எண்ணங்கள் ஈடேறும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களையும் கற்றுத் தெளிவீர்கள்.

விவசாயிகளே! புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். நெல், கோதுமை வகைகளால் ஆதாயமடைவீர்கள். தொலை நோக்குச் சிந்தனையால் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: நவம்பர் 18, 19, 20, 26, 27, 29, 30, டிசம்பர் 8, 9, 11, 15.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 1, 2 மற்றும் 3ந் தேதி நண்பகல் மணி 12.45 வரை எதிர்பார்த்தவை தாமதமாக முடியும்.

பரிகாரம்: உங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

மிதுனம்

உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூட முடியாது” என்பதை அறிந்த நீங்கள், நீதி நேர்மையைப் பின்பற்றி பிறர் போற்றும்படி வாழ்பவர்கள். சனிபகவான் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

எங்குச் சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். வேற்றுமதம், மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். உங்களின் ராசிநாதனான புதன் 25ந் தேதி முதல் சனியை விட்டு விலகி 7ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள்.

சுறுசுறுப்பாக செயல்பட்டு தடைப்பட்ட வேலைகளெல்லாம் விரைந்து முடிப்பீர்கள். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு விலகிச் சென்ற உறவினர், நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். வீடு கட்டுவது, வாங்குவது லாபகரமாக முடிவடையும்.

பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். கடந்த ஒரு மாதகாலமாக ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களைப் பாடாய்ப்படுத்தி, குடும்பத்தில் குழப்பங்களையும், பிரச்னைகளையும் ஏற்படுத்திய சூரியன் இப்போது 6ல் அமர்வதால் அடிமனதிலிருந்த குற்ற உணர்வுகள் நீங்கும். வழக்குகள் சாதகமாகும்.

அரசு காரியங்களும் நல்ல விதத்தில் முடியும். 5ந் தேதிவரை செவ்வாய் 8ம் இடத்தில் மறைந்திருப்பதால் மனஉளைச்சல், முன்கோபம், வீண் அலைச்சல், படபடப்பு வந்து செல்லும். ஆனால், 6ந் தேதி முதல் செவ்வாய் 9ம் வீட்டில் நுழைவதால் நிம்மதி உண்டாகும். சகோதரர்கள் உங்களைச் சரியாகப் புரிந்து கொள்வார்கள். புறநகருக்கு அருகில் உங்கள் ரசனைப்படி வீட்டுமனை வாங்குவீர்கள். 4ல் குரு நிற்பதால் தாயாரின் உடல் நிலை லேசாக பாதிக்கும். வாகனச் செலவும் அதிகமாகும். வயிற்றுவலி, தலைவலி வந்து நீங்கும்.

அரசியல்வாதிகளே! தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தை பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள்.

மாணவ, மாணவிகளே! உங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள்.

ராகு 3ம் வீட்டில் தொடர்வதால் வியாபாரம் செழிக்கும். பழைய சரக்குகளும் விற்றுத் தீரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்களும் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். வேற்று மாநிலத்தை சார்ந்த வேலையாட்களால் நிம்மதி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, கன்ஸ்ட்ரக்சன், பவர் ப்ராஜெக்ட் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் கோள் சொல்வார்கள்.

கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

விவசாயிகளே! மகசூலை அதிகப்படுத்த நவீன ரக உரங்களை பயன்படுத்துவீர்கள். சகிப்புத் தன்மையாலும், கடின உழைப்பாலும் முதலிடம் பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: நவம்பர் 20, 21, 22, 23, 24, 29, 30, டிசம்பர் 1, 2, 8, 9, 10, 11.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 3ந் தேதி நண்பகல் மணி 12.45 முதல் 4 மற்றும் 5ந் தேதி இரவு 8 மணிவரை யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

பரிகாரம்: சென்னை – திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரரையும், வடிவுடையம்மனையும் தரிசியுங்கள். வயதானவர்களுக்கு குடை, காலணி வாங்கிக்கொடுங்கள்.

கடகம்

“குருமொழி கேளாதவனும், தாய் சொல்லைத் தட்டுபவனும் உருவேற மாட்டான்” என்ற சூட்சுமத்தை உணர்ந்த நீங்கள், பெரியவர்களை மதிப்பவர்கள். 5ந் தேதி வரை உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 7ம் இடத்தில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

ராஜ தந்திரத்தை பயன்படுத்தி பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை மூலமாக தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வழக்கில் திடீர் திருப்பம் உண்டாகும்.

ஆனால், 6ந் தேதி முதல் செவ்வாய் 8ல் சென்று மறைவதால் சிறுசிறு விபத்துகள், நெருப்புக் காயங்கள், முன்கோபத்தால் ரத்த அழுத்தம், சகோதர வகையில் சங்கடங்கள், சொத்துப் பிரச்னைகள், பணத்தட்டுப்பாடு என வந்துபோகும். 5ல் நிற்கும் சனியுடன், இந்த மாதம் முழுக்க சூரியனும் சேர்வதால் பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும்.

அவர்களின் வருங்காலம் குறித்த கவலைகளும் வந்து நீங்கும். இன்னும் கொஞ்சம் பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்ளலாம் என்று நினைத்து பெருமூச்சு விடுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

3ந் தேதி வரை 6ல் சுக்கிரன் மறைந்திருப்பதுடன், 25ந் தேதி முதல் புதனும் 6ல் சென்று மறைவதால் காய்ச்சல், சளித்தொந்தரவு, நரம்புச் சுளுக்கு, தொண்டைப் புகைச்சல், மின்னணு, மின்சார சாதனப் பழுது என்று ஏற்படும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீண் சந்தேகங்களால் பிரச்னைகள் வெடிக்கும்.

தாயா, தாரமா என்ற தடுமாற்றமும் வரும். வாகனத்தை மெதுவாக இயக்குங்கள். உறவினர், நண்பர்களுடன் உரிமையில் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஆனால், 4ந் தேதி முதல் சுக்கிரன் 7ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் உற்சாகமடைவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். மனைவியுடனான மோதல்கள் குறையும். அவரின் ஆரோக்யமும் சீராகும்.

அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் செய்யவேண்டாம். கோஷ்டி பூசலில் தலையிடாதீர்கள்.

மாணவ, மாணவிகளே! கடைசி நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்காதீர்கள். அன்றைய பாடங்களை அன்றே படித்து விடுவது நல்லது. விளையாடும்போது சின்னச் சின்ன காயங்கள் ஏற்படக்கூடும்.

கன்னிப் பெண்களே! உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் மீது திடீர் அக்கறை காட்டுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். தோலில் நமைச்சல் வந்து நீங்கும்.

வியாபாரம் இந்த மாதம் முழுக்க சுமாராக இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். புது முதலீடுகளை தவிர்ப்பதும், வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதும் நல்லது. பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உணவு, எண்ணெய், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் வரும்.

உத்யோகத்தில் ஒரேநேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். விரும்பத்தகாத இடமாற்றம் வரும். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். உயரதிகாரிகளால் மறைமுகப் பிரச்னைகள் வந்துபோகும்.

கலைத்துறையினரே! பகட்டாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். கிசுகிசு தொந்தரவுகளும் வரக்கூடும்.

விவசாயிகளே! பூச்சி மற்றும் எலித் தொல்லையால் விளைச்சல் குறையும். டிராக்டர், பம்புசெட் பழுதாகி சரியாகும். வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் கவனம் செலுத்த வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்: நவம்பர் 16, 25, 26, 27, 28, டிசம்பர் 1, 2, 8, 9, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 5ந் தேதி இரவு 8 மணி முதல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் எதிலும் நிதானித்து செயல்படுங்கள்.

சிம்மம்

அடித்தாலும் பட்டுக் கொள்வீர்கள், ஆனால், தரக்குறைவாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் தாங்கிக் கொள்ளாத நீங்கள், தன்மானச் சிங்கங்கள். குருவும், புதனும் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். குடும்ப வருமானம் உயரும். வங்கிக்கடன் உதவியும் கிடைக்கும்.

கல்வியாளர்கள், ஆன்மிக அறிஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். பிள்ளை பாக்யம் உண்டு. மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப்போல் நல்ல குடும்பத்திலிருந்து உங்கள் ரசனைக்கேற்ற வரன் அமையும். மகனுக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். பிதுரார்ஜித சொத்துகள் கைக்கு வந்துசேரும்.

இந்த மாதம் முழுக்க உங்கள் ராசிநாதன் சூரியன் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால் தடைகளெல்லாம் நீங்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சிலருக்கு புதுவேலை கிடைக்கும்.

சொத்து வழக்கு சாதகமாக முடியும். ஆனால், சூரியன் இந்த மாதம் முழுக்க சனியுடன் இணைந்திருப்பதால் நெஞ்சுவலி, தலைச்சுற்றல், உஷ்ணத்தால் வேனல் கட்டி, பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையெல்லாம் வந்து நீங்கும். 3ந் தேதிவரை சுக்கிரன் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால், 4ந் தேதி முதல் சுக்கிரன் 6ல் மறைவதால் அலைச்சலும், செலவினங்களும் அதிகமாகும். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். வாகனத்தை இயக்கும்போது அலைபேசியை தவிர்ப்பது நல்லது.

வீட்டில் குடிநீர், கழிவுநீர் குழாய் அடைப்பு, பழுது வந்து நீங்கும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சர்ப்பக் கிரகங்கள் சாதகமாக இல்லாததால் குடிநீரை காய்ச்சி அருந்துங்கள். கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்காக சாட்சி கையொப்பமிட வேண்டாம். முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அரசியல்வாதிகளே! கட்சியில் மதிப்பு, மரியாதை கூடும். சகாக்களில் சிலர் உங்களை ஆழம் பார்ப்பார்கள்.

மாணவ, மாணவிகளே! கல்வியிலும், கலைப்போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் பொது அறிவுத்திறன் வளரும்.

கன்னிப் பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். பெரிய வியாபாரிகளின் நட்பு கிடைக்கும். பழைய பாக்கிகளை இதமாகப் பேசி வசூலிப்பீர்கள். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். பங்குதாரர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். துரித உணவகம், நிலக்கரி, பதிப்பகம் வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்யோகத்தில் மூத்த அதிகாரி உங்களுக்கு முக்கியத்துவம் தருவதைப் பார்த்து சக ஊழியர்களும் உங்களை மதிப்பார்கள். இடமாற்றம் உங்கள் இஷ்டம்போல் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

கலைத்துறையினரே! உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

விவசாயிகளே! மகசூல் அதிகரிப்பால் சந்தோஷம் நிலைக்கும். அடகிலிருந்த பத்திரத்தை மீட்பீர்கள். அனுபவ அறிவை பயன்படுத்தி அமைதியாக காய் நகர்த்தும் மாதமிது.

ராசியான தேதிகள்: நவம்பர் 16, 17, 18, 25, 26, 27, 28, டிசம்பர் 3, 4, 5, 6, 7, 13, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

பரிகாரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை வணங்கி வாருங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று உதவுங்கள்.

கன்னி

இடித்து அடித்து ஒரு கூடை இடுவதிலும், பிடி சோறு அன்பாய்ப் போடுவதே மேல்” என்ற பழமொழியை அறிந்த நீங்கள், பசியென வந்தவரிடம் பாசமாய் பேசி பாங்காக பரிமாறுவீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதையும் திட்டமிட்டு செய்வீர்கள்.

இடம், பொருள், ஏவலறிந்து பேசும் வித்தையைக் கற்றுக்கொள்வீர்கள். அனுபவ அறிவால் முன்னேற்றம் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புதுரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள்.

தந்தை வழியில் உதவிகள் உண்டு. கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 2ல் அமர்ந்துகொண்டு கண், காது மற்றும் பல்வலியைத் தந்த சூரியன் 3ம் வீட்டில் நுழைவதால் அரசால் அனுகூலம் உண்டு. அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். வழக்குகளும் சாதகமாகும். அடிமனதில் தைரியம் பிறக்கும். பழைய நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

உங்கள் ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். ஜென்ம குரு நடைபெறுவதால் திடீரென்று அறிமுகமாகிறவர்களை அதிகம் நம்பாதீர்கள். கை, கால் வலிக்கும். குதிகாலில் வலி அதிகமாகும். சின்னச் சின்ன விபத்துகளும் வரும். கணவன்-மனைவிக்குள் இருக்கும் அந்தரங்க விஷயங்களையோ, கருத்து மோதல்களையோ வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

ராசிநாதன் புதன் 25ந் தேதி முதல் சனியின் பிடியிலிருந்து விலகுவதால் அழகு, ஆரோக்யம் கூடும். உறவினர், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சனிபகவான் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள்.

புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடிவரும். 5ந் தேதி வரை செவ்வாய் சாதகமாக இல்லாததால் பிள்ளைகளால் டென்ஷன், வீடு, மனை வாங்குவதில் சிக்கல்கள் வந்துசெல்லும். ஆனால், 6ந் தேதி முதல் செவ்வாய் 6ம் வீட்டில் அமர்வதால் சகோதர வகையில் இருந்த மோதல்கள், சொத்துப் பிரச்னைகளெல்லாம் நீங்கும்.

அரசியல்வாதிகளே! மேலிடத்தில் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். மக்களுக்கு நெருக்கமாவீர்கள்.

கன்னிப் பெண்களே! நீண்ட நாள் கனவு நனவாகும். போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். வேலை கிடைக்கும். கல்யாணம் கூடி வரும்.

மாணவ, மாணவிகளே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். விளையாட்டில் பதக்கம் உண்டு.

கேது வலுவாக 6ம் இடத்திலேயே தொடர்வதால் வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்ய பண உதவிகள் கிடைக்கும். பங்குதாரர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். பழைய வாடிக்கையாளர்களும் தேடிவருவார்கள். வேற்று மதம், வேற்று மாநிலத்தைச் சேர்ந்த வேலையாட்களால் ஆதாயமடைவீர்கள். மரம், இரும்பு, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்யோகத்தில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் உண்டாகும். சட்ட விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும், சக ஊழியர்களால் உதவிகள் உண்டு.

கலைத்துறையினரே! உங்களின் படைப்புகள் பலராலும் பேசப்படும். புது வாய்ப்புகளும் தேடிவரும்.

விவசாயிகளே! நிலப்பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் மகசூல் பெருகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். கனி மற்றும் எண்ணெய் வித்துக்களால் லாபமடைவீர்கள். பரபரப்பாக காணப்பட்டாலும் சவால்களில் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: நவம்பர் 18, 19, 20, 21, 27, 29, 30 டிசம்பர் 2, 4, 6, 7, 8, 9, 15.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 10, 11 மற்றும் 12ந் தேதி காலை 7 மணி வரை வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசித்து வாருங்கள்.

துலாம்

“எளியாரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வம் அடிக்கும்” என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்த நீங்கள், வசதி வாய்ப்புகள் வந்தாலும் ஏழை எளியோரை மதிப்பவர்கள். ராகுபகவான் லாப வீட்டில் நீடிப்பதால் பல பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும். கடன் உதவி எதிர்பார்த்த வகையில் வந்து சேரும்.

வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. பழைய இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். சிறுகச் சிறுக சேமித்து வைத்ததில் சின்னதாக ஒரு இடம் வாங்க முயற்சி செய்வீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு.

ராசிநாதன் சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதால் பழுதாகிக் கிடந்த மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவது, அழகுப்படுத்துவதில் ஈடுபடுவீர்கள்.

புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். ஆனால், உங்கள் ராசிக்குள்ளேயே கடந்த ஒருமாத காலமாக அமர்ந்து உங்களை கோபப்பட வைத்த சூரியன் இப்போது 2ல் அமர்ந்திருப்பதால் கோபமும், அலைச்சலும் ஓரளவு குறையும். கண்வலி, காதுவலி வரக்கூடும்.

பற்பசை, சோப்பு, ஷாம்பு இவற்றையெல்லாம் அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். 5ந் தேதி வரை சப்தமாதிபதி செவ்வாய் 4ல் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் மனைவி உங்களுடைய புது முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார்.

மனைவி வழி உறவினர்கள் மத்தியிலும் செல்வாக்கு உயரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். ஆனால், 6ந் தேதி முதல் செவ்வாய் 5ம் இடத்தில் அமர்வதால் பிள்ளைகளிடம் உங்களின் கோபத்தை காட்டிக் கொண்டிருக்காதீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். பாதச்சனி தொடர்வதால் மற்றவர்களை விமர்சித்துப் பேச வேண்டாம் – பிரச்னைகள் வரக்கூடும்.

அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். தலைமையைப் பற்றிய ரகசியங்களை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சியை பெற்றோர் ஆதரிப்பார்கள்.

மாணவ, மாணவிகளே! டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது, படுத்துக் கொண்டே படிப்பதெல்லாம் இனி வேண்டாம். பொறுப்பாக படியுங்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.

வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். விளம்பரத்தையும் பயன்படுத்துவீர்கள். வேலையாட்களிடம் வியாபார ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். பூ, தேங்காய் மண்டி, செங்கல் சூளை வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடி வேலை வாங்க வேண்டி வரும்.

விவசாயிகளே! நவீன ரக விதைகளை பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்தப் பாருங்கள். எதிர்பார்த்த பட்டா வந்து சேரும்.

கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். தடைகள் பல வந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கரையேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: நவம்பர் 19, 20, 21, 22, 23, 29, 30, டிசம்பர் 1, 2, 4, 8, 9, 10.

சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 16 மற்றும் டிசம்பர் 12ந் தேதி காலை மணி 7 முதல் 13, 14ந் தேதி காலை 9.30 மணி வரை தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும்.

பரிகாரம்: திருத்தணி முருகனை தரிசித்து வணங்கி வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

விருச்சிகம்

ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும் வாடி இருக்கும் கொக்கைப் போல்” காலம் நேரம் கனிந்து வரும்வரை காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர் நீங்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் சாதகமான வீடுகளிலும், சாதகமான நட்சத்திரங்களிலும் இந்த மாதம் முழுக்க சென்றுகொண்டிருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும்.

உங்களுடைய அறிவுத் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அனுபவ அறிவை பயன்படுத்தி முன்னேறுவீர்கள். உறவினர்கள் மற்றும் சகோதரர்களின் குடும்ப பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்‌ஷன் மூலமாக திடீர் பணவரவு உண்டு.

உடன்பிறந்தவர்கள் உங்களின் முக்கியத்துவத்தையும், உண்மையான பாசத்தையும் உணர்ந்து கொள்வார்கள். ராசிக்குள் அமர்ந்திருக்கும் சனியுடன் இந்த மாதம் முழுக்க சூரியனும் இணைந்திருப்பதால் முன்கோபம் அதிகமாகும்.

வேலைச்சுமையால் டென்ஷன் இருந்து கொண்டேயிருக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அவ்வப்போது ஒற்றைத்தலைவலி, மூச்சுத் திணறல், வாயுத் தொந்தரவால் நெஞ்சு எரிச்சல், ஒருவித பதட்டம் வந்து செல்லும்.

சின்னச் சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் திருமணத் தடைகள் நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு.

அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம்.

கன்னிப் பெண்களே! காதல் குழப்பங்கள் நீங்கும். கூடுதல் மொழி கற்றுக்கொள்ள முயற்சி செய்வீர்கள்.

மாணவ, மாணவிகளே! சமயோசித புத்தியை பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள் குரு சாதகமாக இருப்பதால் புதுமுதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். பதிப்பகம், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு மூலம் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.

உத்யோகத்தில் உங்களின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேறும். ஆனால், ராகு 10ல் நீடிப்பதால் அலைச்சலும், இடமாற்றமும், வேலைச் சுமையும் ஒருபக்கம் இருந்தாலும் பழைய அதிகாரி உதவியாக இருப்பார். சகஊழியர்களில் ஒருசாரார் உங்களுக்கு ஆதரவாகவும், மற்றொருசாரார் உங்களுக்கு எதிராகவும் செயல்பட வாய்ப்பிருக்கிறது.

கலைத்துறையினரே! அதிரடி சலுகையுடன் எதிர்பார்த்த வாய்ப்புகளும் தேடிவரும்.

விவசாயிகளே! விளைச்சல் மந்தமாக இருக்கும். புது இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். கரும்பு, சவுக்கு, தேக்கு வகைகளால் லாபமடைவீர்கள். கோபத்தை குறைத்துக் கொண்டு, ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்: நவம்பர் 22, 23, 24, 25, டிசம்பர் 1, 2, 3, 4, 5, 10, 11.

சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 17, 18 மற்றும் டிசம்பர் 14ந் தேதி காலை மணி 9.30 முதல் 15ந் தேதி வரை தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த குழந்தைக்கு உதவுங்கள்.

தனுசு

உற்றார் தின்றால் பற்றாய் விளையும், ஊரார் தின்றால் வேராய் விளையும்” என்பதை அறிந்த நீங்கள், சொந்த பந்தங்களை விட அண்டை அசலாருக்கு அதிகம் கொடுத்து உதவுவீர்கள். கேது 3ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். ஆன்மிக அறிஞர்களின் நட்பு கிடைக்கும்.

வீரியத்தைவிட காரியம்தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட சுகமான அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்திலும் மதிப்பு, மரியாதை கூடும். ஷேர்மூலம் பணம் வரும்.

அயல்நாட்டில் இருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் தோற்றப்பொலிவு கூடும். கவர்ச்சிகரமாகப் பேசி எல்லோரையும் ஈர்ப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் சாதிக்கும் வல்லமை உண்டாகும்.

பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

அக்கம்பக்கம் வீட்டாரின் ஆதரவும் பெருகும். இந்த மாதம் முழுக்க உங்களின் பாக்யாதிபதியான சூரியன் 12ம் வீட்டில் மறைந்திருப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தந்தையாருக்கு உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும்.

அரசுக் காரியங்கள் தாமதமாக முடியும். ராசிநாதனான குரு 10ல் தொடர்வதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டிவரும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். ஏழரைச் சனி தொடர்வதால் அவ்வப்போது தூக்கம் குறையும். கடன் பிரச்னையால் சேர்த்து வைத்த கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் இருந்துகொண்டிருக்கும்.

அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப் பாருங்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். ஆடை, அணிகலன் சேரும்.

மாணவ, மாணவிகளே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். ஒருமுறை படித்து விட்டு விடாமல், எழுதிப் பார்த்து நினைவில் நிறுத்துவது நல்லது.

வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். புது முதலீடுகள் பற்றி யோசிப்பீர்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டிவரும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக்கொள்வார்கள். கடையை இருக்கும் இடத்திலேயே தொடர்வது நல்லது. புரோக்கரேஜ், எலக்ட்ரானிக்ஸ், போர்டிங், லாட்ஜிங் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் என்னதான் உண்மையாக உழைத்தாலும் எந்த பலனும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் விடுப்பு எடுப்பதால் வேலைச்சுமை அதிகமாகும். புது உத்யோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.

கலைத்துறையினரே! உங்களின் படைப்புத்திறன் வளரும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.

விவசாயிகளே! பக்கத்து நிலத்துக்காரரை அனுசரித்துப் போங்கள். மாற்றுப் பயிரால் லாபமடைவீர்கள். எதிர்பார்த்தவற்றில் ஒருசில நிறைவேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: நவம்பர் 16, 17, 18, 24, 25, 26, 27, 28, டிசம்பர் 4, 5, 6, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 19, 20 மற்றும் 21ந் தேதி காலை மணி 10.15 வரை முடிவுகள் எடுப்பதில் குழப்பம் வந்து நீங்கும்.

பரிகாரம்: கரூர் அருகேயுள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திரரின் ஜீவசமாதியை தரிசித்து வாருங்கள்.

மகரம்

நிலத்திற்கு தகுந்தாற்போல்தான் கனியின் சுவை அமையும், குலத்திற்கு தகுந்தாற்போல்தான் குணமும் இருக்கும்” என்பதை அறிந்த நீங்கள் தராதரம் அறிந்து பழகுவீர்கள். இந்த மாதம் முழுக்க சூரியன் லாபவீட்டில் நிற்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள்.

அரசால் அனுகூலம் உண்டாகும். அரசியலில் செல்வாக்கு கூடும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வழக்கில் வெற்றி உண்டு. புது பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும்.

ராஜ கிரகங்களான சனியும், குருவும் சாதகமாக இருப்பதால் ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

வேற்றுமதம், மொழி, இனத்தவர்களால் பயனடைவீர்கள். புதுவீடு கட்டிக் குடிபுகுவீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப் புழக்கம் அதிகமாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள்.

உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். 5ந் தேதிவரை செவ்வாய் ராசியிலேயே உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். சர்ப்பக் கிரகங்கள் சாதகமாக இல்லாததால் வீண் செலவு கள், பல்வலி, கண் எரிச்சல் வந்துபோகும். நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக்கூட சிலர் வேறு அர்த்தத்தில் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே, பேச்சில் நிதானம் அவசியம்.

அரசியல்வாதிகளே! மதிப்பு கூடும். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்பு நீங்கும். எதிர்க்கட்சிக்காரர்கள் உதவுவார்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் கனவுகள் நனவாகும். பள்ளி மற்றும் கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். பெற்றோர் உங்களை புரிந்து கொள்வார்கள்.

மாணவ, மாணவிகளே! மதிப்பெண் கூடும். பெற்றோர் நீங்கள் நீண்ட நாட்களாக கேட்ட பொருளை வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வீர்கள்.

வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பற்று வரவு உயரும். சந்தை நிலவரம் அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்வீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். பெயர்ப் பலகையை நவீனமாக அமைப்பீர்கள். இரும்பு, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபமடைவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை கூடும். பாரபட்சமாக நடந்து கொண்ட அதிகாரி உங்களைப் பாராட்டும்படி நிலைமை சீராகும்.

கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறமைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

விவசாயிகளே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். கரும்பு, கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள். செல்லும் இடமெல்லாம் சிறப்பு பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: நவம்பர் 17, 18, 19, 20, 27, 28, 29, 30, டிசம்பர் 2, 6, 8, 9, 15.

சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 21ந் தேதி காலை மணி 10.15 முதல் 22 மற்றும் 23ந் தேதி மாலை 6 மணி வரை எதிலும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: திருவள்ளூர், அரக்கோணத்திற்கு அருகேயுள்ள சோளிங்கர் நரசிம்மரை தரிசித்து வாருங்கள்.

கும்பம்

“புதருக்குள் இருக்கும் இரு பறவைகளை விட கையில் இருக்கும் ஒரு பறவையே மேல்” என நினைக்கும் நீங்கள் வேகமாகவும், விவேகமாகவும் செயல்படுவதில் வல்லவர்கள். உங்கள் ராசிக்கு 10ம் வீட்டிற்குள் சூரியன் நுழைந்திருப்பதால் சவாலான காரியங்களையும் சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.

அரசு காரியங்கள் விரைந்து முடியும். சிலருக்கு புது வேலையும் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. சுபச் செலவுகள் அதிகமாகும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

உங்களின் பூர்வ புண்யாதிபதியான புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். 5ந் தேதி வரை செவ்வாய் ராசிக்கு 12ல் நிற்பதால் சொத்துப் பிரச்னை சுமுகமாகும்.

ஆனால், 6ந் தேதி முதல் செவ்வாய் உங்கள் ராசிக்குள்ளேயே அமர்வதால் சின்ன சின்ன விபத்துகள், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு, முன்கோபம், இளைய சகோதர வகையில் மனத்தாங்கல், உடல் உஷ்ணத்தால் கட்டி என்று வந்துபோகும்.

நிழல் கிரகமான ராகுவும், கேதுவும் சரியில்லாததால் ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுவது நல்லது. வீண் சந்தேகத்தை தவிர்க்கப்பாருங்கள். பழைய இழப்புகள், ஏமாற்றங்களை அசைபோட்டு தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில திட்டங்கள் தீட்டுவீர்கள். வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.

மாணவ,மாணவிகளே! அலட்சியமாக கடைசி நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்றிருக்க வேண்டாம். மொழிப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.

வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். முக்கிய வேலைகளை வேலையாட்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. வெளி மாநிலத்தை சார்ந்தவர்களை வேலைக்கு வைக்கும் போது கவனமாக இருங்கள். பங்குதாரர்களால் நிம்மதி குறையும். எண்ணெய், எரிபொருள், கமிஷன் வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் உதவுவார்கள்.

உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டே போகும். கூடுதல் நேரம் ஒதுக்கி உழைத்தாலும் நல்ல பெயர் இல்லையேயென அவ்வப்போது புலம்புவீர்கள். அதிகாரிகளையும், சக ஊழியர்களையும் பாராட்டிப் பேச கற்றுக் கொள்ளுங்கள். எதிர்பார்த்த சலுகைகள் சற்று தாமதமாகும்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.

விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டையெல்லாம் பெரிது படுத்திக் கொண்டிருக்காதீர்கள். விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். மாற்றுப் பயிரிடுங்கள் லாபம் அதிகமாகும். தன் பலம் பலவீனத்தை உணரும் மாதமிது.

ராசியான தேதிகள்: நவம்பர் 19, 20, 21, 22, 29, 30, டிசம்பர் 1, 2, 8, 9, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 23ந் தேதி மாலை 6 மணி முதல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும்.

பரிகாரம்: மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்து வணங்கி வாருங்கள். மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.

மீனம்

காட்டுக்குப் புலி ஆதரவு, புலிக்கு காடு ஆதரவு” என்ற பழமொழியை அறிந்து வைத்திருக்கும் நீங்கள், ஒரு வட்டத்திற்குள்ளே நில்லாமல் தேசமெங்கும் சுற்றுவீர்கள். ராசிநாதன் குரு 7ம் இடத்திலும், நிழல் கிரகமான ராகு 6ம் வீட்டிலும் வலுவாக அமர்ந்திருப்பதால் பெரிய முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். நாடாளுபவர்களால் பாராட்டப்படுவீர்கள்.

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு அது கூடிவரும். வேற்றுமதத்தை சார்ந்தவர்களால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். 5ந் தேதி வரை உங்களின் தன, பாக்யாதிபதியான செவ்வாய் சாதகமாக இருப்பதால் தைரியம் பிறக்கும்.

வீடு, மனை வாங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஆனால், 6ந் தேதி முதல் செவ்வாய் 12ல் மறைவதால் திடீர் பயணங்கள், கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள், தூக்கமின்மை, கனவுத் தொல்லை வந்துபோகும்.

சூரியன் 9ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். அவரை பகைத்துக் கொள்வீர்கள். சேமிப்புகள் கரையும். பணப்பற்றாக்குறையும் தலைதூக்கும். புதன் சாதகமாக இருப்பதால் கனிவாகப் பேசுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் மராமத்துப் பணிகள் செய்வீர்கள்.

சொந்த பந்தங்களின் அன்புத் தொல்லைகள் குறையும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். பணப்புழக்கமும் அதிகரிக்கும். வெள்ளிப் பொருட்கள், விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் இருக்கும் பழைய நண்பர்கள் உதவுவார்கள். 12ம் வீட்டில் கேது நிற்பதால் வீடு மாறவேண்டிய சூழ்நிலை உருவாகும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தையும் முன்னின்று நடத்துவீர்கள்.

மாணவ, மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பீர்கள். ஆசிரியர் உங்களின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுவார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி உண்டு.

அரசியல்வாதிகளே! தொகுதி மக்கள் நலனில் அதிக அக்கறை காட்டுங்கள்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் உண்டாகும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தை நவீனமாக்குவீர்கள். முக்கிய சாலைக்கு கடையை மாற்ற திட்டமிடுவீர்கள். சிலர் சொந்த இடம் வாங்கி கடையை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் மனங்கோணாமல் நடத்து கொள்வார்கள். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். நகை, ஜவுளி, ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், கன்சல்டன்சி வகைகளால் முன்னேற்றம் உண்டு.

உத்யோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்களுக்காக உயரதிகாரியிடம் பரிந்து பேசுவீர்கள். வேறு நல்ல வாய்ப்புகளும் தேடி வரும்.

கலைத்துறையினரே! பிரபலமாவீர்கள். உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

விவசாயிகளே! விளைச்சல் இரட்டிப்பாகும். நவீனயுக்திகளை கையாளுவீர்கள். ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். தொட்டதெல்லாம் துலங்கி வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: நவம்பர் 16, 17, 18, 21, 22, 23, 24, டிசம்பர் 1, 2, 3, 4, 10, 11, 13, 15.

சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 26, 27 மற்றும் 28ந் தேதி மாலை மணி 3.20 வரை வேலைச்சுமை அதிகரிக்கும்.

பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பட்டீஸ்வரம் துர்க்கையை தரிசித்து வாருங்கள். கோயில் உழவாரப் பணிகளில் கலந்து கொள்ளுங்கள்.

4564
-
Rates : 0
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]