அபரஞ்சியிடமிருந்து தப்பித்த குருக்கள் | www.VijayTamil.Net

அபரஞ்சியிடமிருந்து தப்பித்த குருக்கள்

Loading...

விக்கிரமாதித்தன் கதை

அபரஞ்சியிடமிருந்து தப்பித்த குருக்கள்

முன்னொரு காலத்தில் உச்சினி மாகாளிபுரம் என்ற ஊரைத் தலைநகரமாகக் கொண்ட ஒரு ராஜ்ஜியத்தை விக்கிரமாதித்தன் என்ற வீரதீர பராக்கிரமம் பொருந்திய ராஜா ஆண்டு கொண்டிருந்தான். அவனுக்கு மதியூகம் மிகுந்த பட்டி என்ற மகா மந்திரி துணையாக இருந்தான். அவர்கள் இருவரும் நாடாறு மாதம், காடாறு மாதம் என்று தங்கள் ஆட்சிக்காலத்தைப் பிரித்து நாட்டை ஆண்டு வந்தார்கள்.

இப்படி இருக்கையில் அந்த ஊரில் உள்ள ஒரு கம்மாளனுக்கும் ராஜாவிற்கும் நட்பு உண்டாயிற்று. பட்டி, ராஜாவிடம் “கம்மாளன் நட்பு கூடாது, கம்மாளன் காரியத்தின் மேல்தான் கண்ணாயிருப்பான்”என்று பலமுறை எடுத்துச்சொல்லியும், ராஜா கேட்கவில்லை. தனக்குத் தெரிந்த எல்லா வித்தைகளையும் (கூடுவிட்டு கூடு பாயும் வித்தை உட்பட) அந்தக்கம்மாளனுக்கு சொல்லிக்கொடுத்து விட்டான். பட்டிக்கு இது பிடிக்காவிட்டாலும் “ராஜாவிற்கு எதிராக நாம் என்ன செய்யமுடியும், நாம் சொல்லவேண்டியதைச் சொல்லியாகிவிட்டது, வேறு என்ன செய்யமுடியும், நடப்பது நடக்கட்டும், எதற்கும் நாம் ஜாக்கிரதையாகவே இருப்போம்” என்று மனதில் எண்ணிக்கொண்டு இருந்தான்.

இப்படியிருக்கையில் ராஜா காடாறு மாதம் போகவேண்டிய நாள் வந்தது. வழக்கமாக பட்டியையும் கூட்டிக்கொண்டு போகும் விக்கிரமாதித்தன் இந்த முறை பட்டியை நாட்டிலேயே இருந்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்து கொண்டிருக்கும்படி கூறிவிட்டு, தனியாகவே காட்டுக்குப் போய்விட்டான். சிறிது நாள் கழித்து இதைத் தெரிந்துகொண்ட கம்மாளன் தானும் புறப்பட்டுப் போய் விக்கிரமாதித்தனுடன் சேர்ந்துகொண்டான். கம்மாளனுக்கு எப்படியாவது விக்கிரமாதித்தன் உடம்பில் புகுந்து இந்த ராஜ்ஜிய சுகங்களையெல்லாம் அனுபவிக்கவேண்டும் என்கிற ஆசை மனதில் இருந்துகொண்டேயிருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் கபடமாகவே ராஜாவுடன் நட்பாக இருந்தான். இப்போது ராஜா தனியாகக் காட்டுக்குப்போயிருப்பதால், ஆஹா, நம் திட்டத்தை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று சந்தோஷப்பட்டுத்தான் காட்டுக்குப்போய் விக்கிரமாதித்தனுடன் சேர்ந்துகொண்டான்.

ஒருநாள் சாப்பாட்டுக்குப்பிறகு விக்கிரமாதித்தன் ஒரு மரத்தடியில் இந்தக்கம்மாளனின் மடியில் தலை வைத்துப்படுத்துக் கொண்டிருந்தான. அப்போது அந்த மரத்தில் பல கிளிகள் வசித்துக்கொண்டிருந்தன. அவற்றில் ஒரு ஆண் கிளி இறந்துபோக அதன் ஜோடி பெண் கிளியானது அந்த ஆண் கிளியின் மேல் விழுந்து பிரலாபிப்பதைப் பார்த்த விக்கிரமாதித்தனுக்கு அந்தப் பெண் கிளியின்பேரில் மிகுந்த கருணை உண்டாயிற்று. உடனே தன்னுடைய கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை உபயோகித்து அந்த ஆண் கிளியின் உடலில் பிரவேசித்து அந்தப்பெண் கிளிக்கு ஆறுதலாயிருந்தான்.

நீண்டநேரமாக விக்கிரமாதித்தன் உடலில் அசைவு எதுவும் இல்லாதிருப்பதைப் பார்த்த கம்மாளன் மேலே கிளிகளைப்பார்த்தவுடன் நடந்தவைகளை யூகித்துவிட்டான். ஆஹா, நாம் வெகுநாளாக எதிர்பார்த்த சந்தர்ப்பம் இப்போது வந்துவிட்டது என்று சந்தோஷப்பட்டு உடனே தன்னுயிரை விக்கிரமாதித்தன் உடலில் புகுத்தி, எழுந்து, தன்னுடைய உடலுக்குத் தீ வைத்து எரித்துவிட்டு நேராக உச்சினிமாகாளிபுரம் வந்து சேர்ந்தான்.

இதைப்பார்த்த பட்டிக்கு யோசனை என்ன வந்தது என்றால் “நமது ராஜாவென்றால் காடாறு மாதம் முடிவதற்கு முன்னால் நாட்டுக்கு திரும்பமாட்டாரே, இதில் ஏதோ சூது இருக்கிறது. அதைக்கண்டு பிடிப்போம்” என்று அந்தக்கம்மாளன் ஊரில் இருக்கிறானா என்று ஆட்களை விட்டு விசாரித்தான். அந்தக்கம்மாளன் ஊரில் இல்லையென்று தெரியவந்தது. ஆஹா, இது அந்தக்கம்மாளன் வேலையாகத்தான் இருக்கவேண்டும், நம் மன்னர் நாம் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காமல் மோசம் போய்விட்டாரே? என்று மனதுக்குள் வியாகூலம் மேலிட்டு, ஆனாலும் இப்போது என்ன செய்யமுடியும், “பதறாத காரியம் சிதறாது” என்றபடி பொறுத்திருப்போம் என்று மனதைத் தேற்றிக்கொண்டு கம்மாளனாகிய ராஜாவை வரவேற்று ஆகவேண்டிய காரியங்களைப்பார்த்திருந்தான்.

ராஜா தன்னுடைய காரியங்களை முடித்துவிட்டு வருவதற்குள் அந்தப்புரத்திற்கு ஆள் அனுப்பி, நம் ராஜா மோசம் போனார் போல் தெரிகிறது. அதனால் நான் மறுபடியும் சொல்லி அனுப்பும் வரையிலும் நீங்கள் எல்லோரும் விரதம் இருப்பதாகவும், விரதம் முடிந்தபிறகுதான் ராஜா அந்தப்புரத்துக்குள் வரலாம் என்பதாகவும் சொல்லிவிடுங்கள் என்று திட்டம் செய்தான். கம்மாளன் வந்தவுடன் அவனிடம் இந்த விபரத்தைச்சொல்லி, அவனுக்கு வேறு விடுதி ஏற்பாடு செய்து ஏராளமான பணிப்பெண்களை ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தான். அவனும் சந்தோஷமாகச்சென்று பலவிதமான லீலாவிநோதங்களில் ஈடுபட்டு ராஜ்ஜியத்தை எள்ளளவும் சட்டை பண்ணாமல் சந்தோஷமாக இருந்தான்.

கிளிகளுக்கு வந்த ஆபத்து

காட்டில் விடப்பட்ட விக்கிரமாதித்தனாகிய கிளி,கம்மாளன் போனபிறகு, ஆஹா, மோசம் போனோமே, பட்டி வெகு தூரம் சொல்லியும் கேட்காமல் போனோமே என்று வருத்தப்பட்டு, சரி, போனதைப்பற்றி வருத்தப்பட்டு ஆவதென்ன, நடக்கப் போவதைப் பார்ப்போம் என்று மனதைத் தேற்றிக்கொண்டு கிளிகளோடு கிளிகளாக இருந்தான்.

இருந்தாலும் ராஜாவாக இருந்தவனல்லவா?அந்த வீர தீர பராக்கிரமத்தினாலே அந்த மரத்தில் இருந்த ஆயிரம் கிளிகளையும் ஒன்று சேர்த்து, எங்கு போனாலும் ஒன்றாகப் போவதும், ஒன்றாக இரை தேடுவதுமாக, விக்கிரமாதித்தன் தலைமையில் வாழ்ந்து கொண்டிருந்தன.இப்படி இருக்கையில் ஒரு வேடன் இந்த ஆயிரம் கிளிகள் ஒன்றாகப் போவதையும் வருவதையும் பார்த்து ஆஹா, இந்த ஆயிரம் கிளிகளையும் பிடித்தால், கிளி ஒன்று ஒரு காசு என்று விற்றாலும் நமக்கு ஆயிரம் காசுகள் கிடைக்குமே என்று கணக்குப்போட்டு, ஒரு நாள் அந்தக் கிளிகள் இரை தேடப்போனபின்னர், அந்த மரத்தடியில்வலையை விரித்து வைத்து, கொஞ்சம் தானியங்களை இறைத்துவிட்டு மறைவாகப் போயிருந்தான்.

அன்று மாலை இரை தேடப்போயிருந்த கிளிகள் யாவும் தாங்கள் வசிக்கும் மரத்திற்கு வரும்போது கீழே தானியங்கள் சிதறிக் கிடப்பதைப்பார்த்ததும், எப்போதும் விக்கிரமாதித்தனைக்கேட்டு செயல்படும் கிளிகள் அன்று யாதும் யோசிக்காமல் தானியங்களைப் பொறுக்கப்போய் வலையில் சிக்கிக்கொண்டன. விக்கிரமாதித்தனாகிய கிளியும் எல்லோருக்கும் நேர்ந்த விதி நமக்கும் நேரட்டும் என்று வலையில் விழுந்தது.

எல்லாக்கிளிகளும் விக்கிரமாதித்தனை குறை கூறின.நாங்கள் எல்லோரும் அவரவர்கள் பாட்டில் எங்கள் போல் வாழ்ந்துகொண்டிருந்தோம். எங்களை எல்லாம் ஒன்று சேர்த்து இப்போது எல்லோரும் ஆபத்தில் சிக்கிக்கொண்டோமே! இப்போது என்ன செய்வது என்று ஆளாளுக்கு பிரலாபித்தன. அப்போது விக்கரமாதித்தன் சொல்கிறான்: கூடி வாழ்ந்து கெட்டாரும் இல்லை, பிரிந்து வாழ்ந்து உயர்ந்தாரும் இல்லை. இப்போது நான் சொல்வதை எல்லோரும் கவனமாகக் கேளுங்கள். வேடன் வந்து பார்க்கும்போது எல்லோரும் சிறகுகளை விரித்து இறந்தது போல் படுத்துக் கொள்ளுங்கள். வேடன் ஓஹோ, வலையில் விழுந்த வேகத்தில் கிளிகள் செத்துப்போனாற்போல் இருக்கிறது என்று எண்ணி ஒவ்வொரு கிளியாக கீழே போடுவான். முதலில் விழுந்த கிளி பின்னால் விழுகின்ற கிளிகளை எண்ணிக்கொண்டு இருந்து ஆயிரம் எண்ணிக்கை ஆனவுடன் எல்லோரும் பறந்து போய்விடலாம் என்று யோசனை சொல்லியது.
அப்படியே வேடன் வந்து பார்க்கும்போது எல்லாக்கிளிகளும் இறந்தது போல் கிடந்தன. வேடனும் இதைப்பார்த்து அடடா, வலையில் விழுந்த வேகத்தில் எல்லாக்கிளிகளும் செத்துப்போயினவே என்று வருத்தப்பட்டு ஒவ்வொரு கிளியாக எடுத்து கீழே போட்டான். முதலில் விழுந்த கிளி எண்ணிக்கொண்டு இருந்தது. 999 கிளிகள் ஆனவுடன் வேடன் இடுப்பில் இருந்த வெட்டுக்கத்தி தவறி கீழே விழுந்தது. ஆஹா, இத்துடன் ஆயிரம் கிளிகளும் சரியாய்விட்டன என்று முதல் கிளி பறக்க எல்லாக்கிளிகளும் பறந்து போய்விட்டன. வேடன் கையில் இப்போது விக்கிரமாதித்தன் மட்டும் இருந்தான். வேடனுக்கு ஒரே சமயத்தில் ஆச்சரியமும் கோபமும் சேர்ந்து வந்தன. கையில் இருக்கும் கிளியைப்பார்த்தான். அது மற்ற கிளிகளைவிட பெரிதாகவும் வயதானதாகவும் இருந்தது. ஆஹா இந்தக்கிளிதான் மற்ற கிளிகளுக்கு இந்த யோசனையை சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும், இதை என்ன சொய்கிறேன் பார் என்று கூறிக்கொண்டு அதன் கழுத்தைத் திருகப் போனான். கிளி வியாபாரம் செய்ததும் சபதம் செய்ததும்.

அப்போது அந்தக்கிளி வேடனைப்பார்த்து சொல்லிற்று. இதோ பார் வேடா, அவசரப்படாதே, இந்த ஆயிரம் கிளிகளையும் நீ விற்றிருந்தால் அதிகபட்சமாக ஆயிரம் காசு கிடைத்திருக்கும்.
நீ என்னை உயிருடன் விட்டால் உனக்கு ஆயிரம் பொன் கிடைக்க வழி செய்கிறேன், என்றது. வேடன் எப்படி என்று கேட்டான். அதற்கு கிளி சொல்லிற்று. பக்கத்து ஊர் கடைவீதியில் என்னைக்கொண்டுபோய் விற்பனை செய். யாரும் விலை என்னவென்று கேட்டால் ஆயிரம் பொன் என்று சொல், மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிற்று.

அப்படியே வேடனும் பக்கத்து ஊர் கடைவீதிக்கு போய் அதிசயக்கிளி வாங்கலியோ என்று கூவினான். விலை என்ன என்று கேட்டவர்களுக்கு ஆயிரம் பொன் என்று சொன்னான். கேட்டவர்களெல்லாம் சிரித்து விட்டுப்போனார்கள். இப்படியே வேடன் நகைக்கடை வீதியில் மாணிக்கம் செட்டியார் என்பவரின் கடைக்கு முன்னால் போகும்போதும் கூவினான். செட்டியார் கூப்பிட்டு விலையைக்கேட்டபோது வேடன் ஆயிரம் பொன் என்று சொன்னான். செட்டியார் சிரிப்புடன், ஏனப்பா, கிளி என்றுக்கு ஒரு காசு விலை. இந்தக்கிளி கொஞ்சம் அழகாக இருப்பதால் இரண்டு காசு கொடுக்கலாம், நீ ஆயிரம் பொன் கேட்கிறாயே, இதென்ன உலக அதிசயமாக இருக்கிறதே, என்று சொன்னார்.

அப்போது அந்தக்கிளி செட்டியாரைப்பார்த்து, “வாருமையா, செட்டியாரே, நீர் என்னை இந்த வேடனிடமிருந்து ஆயிரம் பொன் கொடுத்து வாங்கி உமது கடையில் வையும், சகல வியாபாரத்தையும் என் வசம் விட்டுவிட்டு நீர் நான் வியாபாரம் செய்யும் நேர்த்தியைப்பாரும். இந்த ஆயிரம் பொன்னைப்போன்று பல ஆயிரம் பொன் உமக்கு சம்பாதித்து தருகிறேன்” என்று சொல்லியது. இதைக்கேட்ட செட்டியாரும் கிளியின் மதுரமான வார்த்தைகளில் மயங்கி, வேடன் கேட்ட விலையைக்கொடுத்து கிளியை வாங்கி, அதற்கு ஒரு நவரத்தினகசிதமான ஒரு கூண்டு செய்து அந்தக்கிளியை அந்தக்கூண்டில் விட்டு அதற்கு வேண்டிய ஆகாரமெல்லாம் கொடுத்து வைத்திருந்தான்.

அப்போது அந்தக்கிளி செட்டியாரைப்பார்த்து கூறியது. ஐயா, செட்டியாரே, நாளையிலிருந்து இந்தக்கடையில் இருக்கும் வேலையாட்களெல்லாம் நான் சொல்லும்படியாகவும், இந்தக்கடை வியாபாரத்தை நான் மேற்பார்வை பார்க்கும்படியாகவும் திட்டஞ்செய்து நீர் ஓய்வாக திண்டுவில் சாய்ந்துகொண்டு நான் வியாபாரஞ் செய்யும் சமர்த்தைப்பாரும் என்று சொல்லியது. செட்டியாரும் அவ்வண்ணமே யாவருக்கும் திட்டஞ்செய்துவிட்டு வீட்டுக்குப்போனார்.

மறுநாள் முதல் கிளி வருபவர்களை வரவேற்பதுவும், ஆட்களைக் கூப்பிட்டு அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொடுக்கச்சொல்வதும், வியாபாரத்திற்கு வந்தவர்களிடம் சாதுர்யமாகப்பேசி வியாபாரத்தை முடிப்பதுவுமாக, கடையில் என்றுமில்லாத அளவிற்கு கூட்டமும் வியாபாரமும் அதிகரித்தது.

இந்த மாதிரி ஒரு கிளி வியாபாரம் செய்கின்றது என்கிற சேதி அக்கம்பக்கத்து நாட்டுக்களுக்கெல்லாம் பரவி, அங்கிருந்தெல்லாம் வியாபாரத்திற்கு ஜனங்கள் வர, மாணிக்கம் செட்டியாருக்கு ஏகமாக வியாபாரம் பெருகி, செட்டியார் சந்தோஷத்தில் ஒரு சுற்று பெருத்துவிட்டார்.

இது தவிர, இந்த விக்கிரமாதித்தனாகிய கிளி, அக்கம் பக்கத்திலுள்ள விவகார வில்லங்க வழக்குகளை விசாரித்து எள்ளுக்காய் பிளந்த மாதிரி இரு தரப்பினரும் ஒத்துக்கொள்ளத் தகுந்ததாய் தீர்ப்பும் சொல்லி வந்தது. இப்படி கிளியின் வியாபார சாமர்த்தியமும், நீதி வழங்கும் பாங்கும் தேசதேசாந்திரங்களெல்லாம் பரவி, ஏக கியாதியுடன் விளங்கி வரும் நாளில்…அந்த ஊர் பிரபல தாசி அபரஞ்சிக்கும் கோயில் குருக்களுக்கும்ஏற்பட்ட வழக்கு கிளியிடம் வந்தது.
கிளி தாசியிடமும், குருக்களிடமும் வழக்கின் விபரத்தைக்கேட்டு அதன் சாரத்தைப்புரிந்து கொண்டது. தாசியிடம் கிளி கேட்டது, இந்த கோவில் குருக்கள் உன்னை கனவில் சேர்ந்ததிற்காக உனக்கு ஆயிரம் பொன் கொடுக்கவேண்டும், அதுதானே உன்னுடைய வழக்கு என்று கேட்டது. தாசியும், ஆஹா நமக்கு ஆயிரம் பொன் வரப்போகின்றது என்று சந்தோஷப்பட்டு, ஆமாம், ஆமாம் என்றாள். சரி, சற்றுப்பொறு, தரச்சொல்கிறேன் என்று சொல்லி விட்டு, கடை ஆட்களைக்கூப்பிட்டு அங்கே வாசலில் ஒரு கம்பம் நடச்சொல்லியது.

கம்பம் நட்டானதும் கடையிலிருந்து ஆயிரம் பொன் எடுத்து ஒரு பட்டுத்துணியில் ஒரு முடிப்பாக கட்டச்சொன்னது. அந்த பொன் முடிப்பை அந்த கம்பத்தின் உச்சியில் கட்டச்சொன்னது. ஆட்கள் அவ்வாறே கட்டினார்கள். கட்டின பிறகு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைக்கொண்டு வந்து கம்பத்தின் கீழ் வைக்கச் சொன்னது. ஆட்கள் அவ்வாறே வைத்தார்கள். இந்த வழக்கைப்பற்றி கேள்விப்பட்ட அந்த ஊர் ஜனங்கள் எல்லோரும் கிளி சொல்லும் தீர்ப்பைக்கேட்க ஆவலுற்றவர்களாய் அங்கே குழுமிவிட்டார்கள்.

அப்போது அந்தக்கிளி தாசியைக்கூப்பிட்டு இந்தக்கண்ணாடியில் பொன்முடிப்பு தெரிகிறதா என்று கேட்டது. தாசி ஆம் தெரிகிறது என்றாள். சரி, அதுதான் குருக்கள் உனக்குக் கொடுக்கவேண்டிய ஆயிரம் பொன், எடுத்துக்கொள் என்று கூறியது. கண்ணாடியில் தெரியும் நிழலை எடுக்கக்கூடுமோ என்று தாசி கேட்டாள். கனவில் உன்னைச் சேர்ந்ததிற்கு கண்ணாடியில் தெரியும் பொன்தான் சமானமாகும் என்று கிளி சொல்லியது. கூடியிருந்த ஜனங்கள் எல்லோரும் கரக்கம்பம், சிரக்கம்பம் செய்து, ஆரவாரித்து கிளியின் தீர்ப்பை ஆமோதித்தனர். தாசியைப்பார்த்து கைகொட்டி சிரித்தனர். தாசி அபரஞ்சிக்கு மிகுந்த அவமானமாகப் போய்விட்டது.

அப்போது அந்த தாசியானவள் கிளியின் அருகில் சென்று, ஏ, கிளியே, நீ ஒரு அற்ப ஜீவனாயிருந்தும் என்னை இவ்வாறு அவமானப்படுத்தினாய். இந்த வழக்கு எனக்கு ஜெயிக்காது என்றிருந்தால், என்னைத்தனியாக கூப்பிட்டு, இந்த வழக்கு உனக்கு ஜெயிக்காது, நீ வீட்டுக்குப்போகலாம் என்று சொல்லியிருந்தால் நான் போயிருப்பேனல்லவா? அப்படிக்கில்லாமல் இவ்வளவு பேருக்கு முன்னால் என்னை இவ்வாறு அவமானப்படுத்தலாமா, என்று கேட்டாள். அதற்கு கிளி, நீ அக்கிரமமான வழக்கு கொண்டு வந்தாய், நான் அதற்குத்தகுந்த மாதிரி தீர்ப்பு சொன்னேனேயல்லாமல் வேறொன்றும் தவறாகச்சொல்லவில்லையே என்றது. அப்போது தாசிக்கு ஆங்காரமுண்டாகி, ஓ கிளியே, இவ்வளவு பேர்களுக்கு முன்னால் என்னை அவமானப்படுத்தியதுமல்லாமல் உன்னுடைய செயலுக்கு நியாயமும் கற்பிக்கிறாயா, உன்னை என்ன செய்கிறேன் பார் என்றாள். கிளி உன்னால் என்ன செய்யமுடியுமோ அதைச்செய்துகொள் என்று கூறிவிட்டது.

தாசியின் சபதம்:

அப்போது தாசியானவள், “என்னை இப்பேர்க்கொத்த அவமானம் செய்த உன்னை இன்னும் மூன்று நாளைக்குள், உன் உடம்பைக் கறியாகவும், தலையை ரசமாகவும் வைத்து நான் சாப்பிடாமற்போனால் நான் தாசி அபரஞ்சி இல்லை” என்று சபதம் செய்தாள்.

கிளியின் சபதம்:

அப்போது கிளியானது தாசியையும், கூடியிருந்த ஜனங்களையும் பார்த்து சொன்னது. “இந்த தாசியானவள் கொண்டு வந்த வழக்கை நான் ஆகாயத்திற்கும், பூமாதேவிக்கும் பொதுவாக தீர்ப்பு சொன்னேன். அதை இவள் ஒத்துக்கொள்ளாமல் இப்பேர்க்கொத்த சபதம் செய்தாள். இவள் இப்படிப்பட்ட சபதம் செய்தபடியால் நானும் ஒரு சபதம் செய்கிறேன். இன்னும் 15 நாளில் இவளை மொட்டை அடித்து, முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேலேற்றி இந்த ஊர் பெருமாள் கோவிலை, கோவிந்தா, நாராயணா என்று சொல்லிக்கொண்டு மூன்று முறை வலம் வர வைக்காவிட்டால் நானும் மாணிக்கம் செட்டியார் வளர்க்கும் கிளியாவேனோ” என்று சபதமிட்டது.

யாருடைய சபதம் நிறைவேறிற்று?

தாசி அபரஞ்சியிடம் மாமூலாகப் போய் வருபவர்கள் ஏழு பேர்களுண்டு. அவர்கள், அந்த ஊர் ராஜா, முக்கிய மந்திரி, சேனாதிபதி, ஒற்றர் படைத்தலைவன், கோவில் தர்மகர்த்தா, மாணிக்கஞ்செட்டியார் ஆகியோர்.

இவர்கள் வாரத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொருத்தராக முறை வைத்துக்கொண்டு, வாரந்தோறும் அவள் வீட்டுக்கு, இரவு மூன்றாம் ஜாமத்தில் போயிருந்து, விடிவதற்கு ஒரு ஜாமம் முன்பாகவே தங்கள் வீட்டுக்குத் திரும்பி விடுவார்கள். தாசியின் வழக்கு நடந்த அன்று மாணிக்கஞ்செட்டியாரின் முறை. தாசி வழக்கு முடிந்து வீட்டுக்குப் போனதும் வேலைக்காரிகளைக் கூப்பிட்டு, இன்று பொழுது சாய்ந்ததும் வாசற்கதவைச் சாத்தி தாள்போட்டு பந்தனம் பண்ணிவிடுங்கள்என்று சொல்லிவிட்டு படுக்கப்போய் விட்டாள்.

அன்று இரவு வழக்கம்போல் மாணிக்கஞ்செட்டியார் தாசி வளவுக்குப்போக, என்றுமில்லாதபடி வாசற்கதவு பந்தனம் பண்ணியிருந்தது. செட்டியார் கதவைத்தட்ட, யாரது என்ற குரல் கேட்டது. செட்டியார், நான்தான் மாணிக்கஞ்செட்டியார் என்று சொல்ல, தாசி கதவுக்குப்பின்னால் இருந்துகொண்டு, நீர் உமது கடையில் இருக்கும் கிளியைக்கொண்டு வந்து கொடுத்தால் கதவு திறக்கப்படும், இல்லையேல், நீர் அப்படியே உமது வீட்டுக்குப் போய்க் கொள்ளலாம் என்று சொன்னாள். செட்டியாருக்கு மோகம் தலைக்கேறி- யிருந்தபடியால், யாதொன்றும் ஆலோசிக்காமல் நேரே கடைக்குப்போய் கடையைத் திறந்து கிளிக்கூண்டை எடுத்துக்கொண்டு தாசி வீட்டுக்கு நடக்கலானான்.

செட்டியார் அர்த்தராத்திரியில் கடையைத்திறந்து கூண்டை எடுத்துப்போவதைக்கண்ட கிளி யோசனை செய்தது. ஆஹா, இன்று இந்தச்செட்டி தாசி வீட்டுக்குப்போயிருக்காற்போல் தெரிகிறது. தாசியானவள் நம்மை எடுத்துக்கொண்டு வரும்படி சொல்லியிருக்க வேண்டும். அதனால்தான் இந்தச்செட்டி இந்நேரத்தில் நம்மை எடுத்துக்கொண்டு போகிறான். இப்போது இவனுக்கு மோகம் தலைக்கேறி இருப்பதால் நாம் என்ன சொன்னாலும் கேட்கமாட்டான், விதிப்படி நடக்கட்டும் என்று ஒன்றும் பேசாமலிருந்தது.

செட்டியார் தாசி வீட்டுக்குப் போய் கதவைத்தட்டினவுடன் தாசி கிளி கொண்டுவந்தீரோ என்றாள். இவன் ஆம் என்று சொல்ல, தாசியானவள் உடனே கதவைத் திறந்து கிளிக்கூண்டை வாங்கி தாதியிடம் கொடுத்து பத்திரப்படுத்தச் சொல்லிவிட்டு, செட்டிக்கு கைலாகு கொடுத்து அழைத்துப்போய், கைகால் கழுவ நீர் மொண்டு ஊற்றி, பின்பு அம்சதூளிகா மஞ்சத்திற்கு கூட்டிக்கொண்டு போய் அமர வைத்து, குடிப்பதற்கு ஏலம், பனங்கற்கண்டு, குங்குமப்பூ போட்டுக் காய்ச்சிய பால் கொடுத்து, வெற்றிலை, பாக்கு மடித்து, அத்துடன் வாசனைத் திரவியங்களும் சேர்த்து வாயில் ஊட்டி, விடியும்வரை சரச சல்லாபமாக இருந்தாள்.

விடிவதற்கு ஒரு நாழிகை இருக்கும்போது செட்டி எழுந்திருந்து அவன் வீட்டிற்குப்போனான். தாசியும் எழுந்திருந்து போய் கிளியைப்பார்த்தாள். “ஏ கிளியே, உன்னுடைய நிலையைப் பார்த்தாயா? இன்று மதியம் நீ என்னுடைய வயிற்றுக்குள் போகப்போகிறாய், அதற்குள் எத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணினாய்”என்று பலவிதமாக ஏசினாள்.

கிளி இவளுடன் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது? என்று வாளாவிருந்தது. பிறகு தாசியானவள் வழக்கமான காலைக்கடன்களை முடித்து, குளித்து, ஆடை அலங்காரங்கள் செய்து கோவிலுக்குப் புறப்பட ஆயத்தமானாள். போகுமுன் வீட்டு வெள்ளாட்டியைக் கூப்பிட்டு இதோ பார், இன்று மதியத்திற்கு இந்தக்கிளியைக்கொன்று தலையை ரசமாகவும், உடலைக்கறியாகவும் சமைத்து வை, ஜாக்கிரதையாக செய், என்று திட்டப்படுத்திவிட்டு கோவிலுக்குப் போனாள். தாசி அன்றாடம் அந்த ஊர் பெருமாள் கோவிலுக்குப் போகும் வழக்கமுண்டு.

தாசி கோவிலுக்குப் போனவுடன் வெள்ளாட்டி கிளியைச் சமைக்கத் தேவையான மசாலெல்லாம் அரைத்து வைத்துவிட்டு, கூண்டைத் திறந்து கிளியைப் பிடிக்கப்போனாள். கிளி இந்த சமயத்தை விட்டால் தமக்கு வேறு சமயம் கிடைக்காது என்று யோசித்து வெள்ளாட்டி தன்னைப்பிடிக்க வரும்போது படபடவென்று இறகுகளைப்பலமாக அடித்து, மூக்காலும், கால் நகங்களாலும் கை, முகம் ஆகியவைகளில் பிராண்ட, வெள்ளாட்டி பயந்துபோய் கிளியைப்பிடித்த பிடியை விட்டுவிட்டாள். உடனே கிளி பறந்து போய் வெளியில் சென்று பெருமாள் கோவிலில் வாழும் பல கிளிகளுடனே ஒன்றாய்ச் சேர்ந்துவிட்டது. வெள்ளாட்டி பதறிப்போனாள்.

அய்யோ… எஜமானிக்குத் தெரிந்தால் நம் உயிர் உடலில் தங்காதே, என்ன செயவேன் என்று கொஞ்ச நேரம் பிரலாபித்துவிட்டு, மனம் தேறி, உடனே கடைத்தெருவுக்கு ஓடிப்போய் இரண்டு காசு கொடுத்து ஒரு கவுதாரியை வாங்கி வந்து, கொன்று, தலையை ரசமாகவும், உடலைக் கறியாகவும் சமைத்து வைத்துவிட்டு, அந்தக் கவுதாரியின் சமைக்காத பாகங்களனைத்தையும் கண்காணாத இடத்தில் புதைத்து விட்டு, வீட்டுக்கு வந்து எப்போதும் போல இருந்தாள்.

தாசி கோயில் வழிபாடுகளை முடித்துவிட்டு வீடு திரும்பியவுடன் வெள்ளாட்டியைக்கூப்பிட்டு, கிளியை சமைத்தாயிற்றா? என்று விசாரித்தாள். வெள்ளாட்டி ஆம் என்று சொல்ல அப்படியானால் நான் சாப்பிடுகிறேன் என்று சொல்லி, கைகால் முகம் கழுவி, சாப்பிட உட்கார்ந்தாள். வெள்ளாட்டி, உடனே தலைவாழை இலை போட்டு சோறு வைத்து, பண்ணின கறியையும் இலையில் வைத்து, ரசத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி பக்கத்தில் வைத்தாள்.

தாசியானவள், ரசத்தை சோற்றில் ஊற்றிப்பிசைந்து, ஒரு வாய் சோற்றை வாயில் போட்டு, கறியில் ஒரு துண்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, “ஏ கிளியே, நீயா என் தலையை மொட்டை அடிப்பேனென்றாய்” என்று சொல்லி அந்தக்கறியை ஒரு கடி கடிப்பாள் அதை சோற்றுடன் விழுங்கிவிட்டு, பின்னும் ஒரு வாய் சோற்றை வாயில் போட்டு, ஒரு கறியைக்கையில் எடுத்துக்கொண்டு, “ஏ கிளியே, நீயா என் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்துகிறேனென்றாய்” என்று சொல்லி அந்தக்கறியைக்கடித்து, அந்த வாய்சோற்றை முழுங்குவாள். இப்படியாக அந்தச்சோறு, கறி, ரசம் முழுவதையும் சாப்பிட்டு முடித்து கை கழுவி,தாம்பூலம் போட்டுவிட்டு திருப்தியாக, தன் சபதம் நிறைவேறியது என்ற எண்ணத்துடன் படுத்து தூங்கினாள். கோயிலில் கிளிக்கூட்டத்துடன் இருந்த விக்கிரமாதித்தன்இனி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான.

இப்படி இருக்கையில் தாசி அபரஞ்சிக்கு நெடுநாளாய் ஒரு அபிலாக்ஷை உண்டு. அது ன்னவென்றால், தான் எப்படியாவது கூண்டோடே வைகுந்தம் போகவேண்டும் என்கிற ஆசைதான். இதற்காகத்தான் அவள் அனுதினமும் பெருமாள் கோயில் சென்று வேண்டிக்கொள்வது.

இதைப்பார்த்த விக்கிரமாதித்தன் ஒரு நாள் கோவிலுக்குள் சென்று பெருமாள் சிலைக்குப்பின்னால் மறைந்து கொண்டான். அன்று கோவிலில் யாரும் இல்லை. தாசி வந்து பெருமாளைக் கும்பிட்டுவிட்டு தன் வேண்டுதலைச்சொன்னாள். “பெருமாளே, நான் எத்தனை நாளாக கூண்டோடு வைகுந்தம் போக வேண்டுமென்று வேண்டிக் கொண்டிருக்கிறேன், இதற்காக எத்தனை தானதருமம் செய்திருக்கிறேன், நீ மனமிரங்க மாட்டாயா”என்று உருக்கமாக வேண்டிக் கொண்டாள்.

அப்போது பெருமாள் சிலைக்குப்பின்னால் இருந்த விக்கிரமாதித்தன், பெருமாள் பேசுவதுபோல் பேசினான்.“அகோ வாரும் அபரஞ்சியே, உன் பக்திக்கு மெச்சினோம், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” என்றது. அபரஞ்சி மெய் சிலிர்த்து, வாய் குழறி, “நாராயணா, கோவிந்தா, மதுசூதனா, உன் திருவடியை அடைவதைத்தவிர வேறென்ன வேண்டும், என்னை இந்தக்கூண்டோடே உன் வைகுண்டத்திற்கு அழைத்துக்கொள், அதைத்தவிர வேறொன்றும் வேண்டேன்” என்று பெருமாளைப் பலவாறாகத் துதித்து நின்றாள்.

அப்போது கிளியாகிய விக்கிரமாதித்தன் கூறலுற்றான். “ஆஹா, உன் ஆசையை நிறைவேற்றுகிறோம். இன்று முதல் உன் சொத்துக்களை முழுவதும் தானதருமம் செய்துவிட்டு, இன்றைக்கு எட்டாம் நாள் உச்சிப்பொழுதில் நீ உன் தலைமுடியை முழுதுமாக நீக்கிவிட்டு, முகம் முழுவதும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி இங்கு வரவேண்டும். அது ஏனென்றால் நீ இந்த ரூபத்திலேயே தேவலோகம் வந்தாயென்றால் உன்னைப்பார்க்கும் தேவர்களெல்லாம் உன் அழகில் மயங்கி உன் பின்னாலேயே வர ஆரம்பித்து விடுவார்கள். அதனால்தான். நீ தேவலோகம் வந்து அங்குள்ள ஆகாய கங்கையில் மூழ்கி எழுந்தாயானால் உன் கேசம் இன்னும் பன்மடங்காக வளர்ந்து, உன் தேக காந்தியும் இன்னும் அதிகமாக ஜொலிக்கும்.

பிறகு இங்கு நீ இந்தக்கோலத்தில் வந்த பிறகு, ஒரு கழுதை மேல் ஏறி இந்தக்கோவிலை நாராயணா, கோவிந்தா என்று சொல்லிக்கொண்டு மூன்று முறை வலம் வந்து கொடிமரத்தின் கீழ் நிற்பாயாகில் நாம் உனக்கு தேவலோகத்திலிருந்து புஷ்பகவிமானம் அனுப்பிவைக்கிறோம். நீ அதில் ஏறி நம் லோகத்திற்கு வந்து சேர்வாயாக” என்று சொல்லி முடித்தது.

தாசியும் நம் நெடுநாள் வேண்டுதலுக்கு பெருமாள் இன்றுதான் செவி சாய்த்தார் என்று சந்தோஷப்பட்டு, நேராக அரச சபைக்கு சென்று, ராஜாவிடம் கோவிலில் நடந்த விசேஷங்களையெல்லாம் சொல்லி, “இன்றைக்கு எட்டாம் நாள் பெருமாள் என்னைக்கூண்டோடே வைகுண்டத்திற்கு அழைத்துக்கொள்வதாக அருள் புரிந்திருக்கிறார். ராஜா அவர்கள் 56 தேசத்து அரசர்களுக்கும் ஓலை அனுப்பி இந்த வைபவத்தைக்காண வருமாறு கேட்டுக்கொள்ளவேண்டும்” என்று சொன்னாள். ராஜாவும் சரியென்று ஒத்துக்கொண்டு எல்லா தேசத்திற்கும் ஓலை அனுப்ப ஏற்பாடு செய்தார்.

பிறகு தாசியானவள் வீட்டிற்கு வந்து அக்கம் பக்கத்திலுள்ளோருக்கு சேதி சொல்லிவிட்டு, மறுநாளிலிருந்து தன் சொத்துக்களையெல்லாம் தானதருமம் பண்ண ஆரம்பித்தாள். ஏழு நாட்கள்களில் இவ்வாறு தன் சொத்துக்களைப்பூராவும் தானம் செய்து முடித்துவிட்டாள்.

இந்த ஏழு நாட்களுக்குள் அபரஞ்சி கூண்டோடு வைகுந்தம் போகப்போகிறாள் என்கிற செய்தி எல்லா ஊர்களுக்கும் காட்டுத்தீ போல பரவி ஜனங்கள் கூட்டம்கூட்டமாக வர ஆரம்பித்தார்கள்.

ராஜா அனுப்பிய ஓலையும் எல்லா தேசங்களுக்கும் போக, சகல தேசத்து ராஜாக்களும் இந்த அதிசயத்தைப்பார்க்க கூடிவிட்டார்கள். உச்சினிமாகாளிபுரத்திற்கும் இந்த ஓலை போய்ச் சேர்ந்தது.

அதைப்பார்த்த பட்டி, இதென்ன நாம் இதுவரை கேளாத அதிசயமாக இருக்கிறது, யாரும் கூண்டாடே வைகுந்தம் போவது கிடையாதே, இதில் நம் ராஜாவின் லீலை ஏதாகிலும் இருந்தாலும் இருக்கலாம் என்று அவனும் இந்த அதிசயத்தைப்பார்க்க வந்து சேர்ந்தான்.

எட்டாம் நாள் பொழுது விடிந்தது. அபரஞ்சி எழுந்திருந்து நாவிதனை வரச்சொல்லி தன் தலைமுடியை நீக்கினாள்.

வண்ணானிடம் சொல்லி அவன் கழுதையைக் குளிப்பாட்டி பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரச்சொல்லி ஏற்பாடு செய்தாள். பிறகு முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு, கோவிலுக்கு வேலைக்காரிகள் துணைக்கு வர, வந்து சேர்ந்தாள். கோவிலில் எள் போட்டால் எள் கீழே விழமுடியாத அளவிற்கு கூட்டம் ஜேஜே வென்று அலை மோதியது.பட்டியும் வந்து ஒரு ஓரமாக நின்றிருந்தான்.

வண்ணான் கழுதையைத் தயாராக வைத்திருந்தான். தாசியும் அந்த ஊர் ராஜாவிடம் சென்று வணங்கி விடை பெற்றுக்கொண்டு, கழுதை மேல் ஏறி, நாராயணா, கோவிந்தா என்று சொல்லிக்கொண்டு கோவிலை மூன்று முறை வலம் வந்து, கொடிமரத்தினடியில் வந்து நின்றாள்.

அப்போது சரியாக உச்சிப்பொழுதாகியது. எல்லோரும் புஷ்பக விமானம் வருவதை எதிர்பார்த்து வானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது விக்கிரமாதித்தனாகிய கிளி கொடிமரத்தின் மீது வந்து உட்கார்ந்து பின்வருமாறு சொல்லத்தொடங்கியது.

“அகோ வாரும் சகல தேசத்து ராஜாக்களே, பொதுஜனங்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் நான் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள். இதோ நிற்கிறாளே இந்த தாசிக்கும் எனக்கும், ஒரு விவகாரம் ஏற்பட்டது. அது என்னவென்றால், இவள் கொண்டுவந்த ஒரு வழக்கில் நான் ஆகாயத்திற்கும் பூமாதேவிக்கும் பொதுவாக ஒரு தீர்ப்பு சொன்னேன். அதை இவள் ஒப்புக்கொள்ளாமல் என்னைக்கொன்று கறி சமைத்து தின்கிறேனென்று சபதஞ் செய்தாள். அதற்கு நான் இவளை இந்தக்கோலம் செய்கிறேனென்று சபதம் செய்தேன். யாருடைய சபதம் ஜெயித்தது என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்”என்று கூறியது.
கூடியிருந்த ஜனங்கள் எல்லோரும்கைகொட்டி சிரித்தார்கள். இதைப்பார்த்த தாசிக்கு அவமானம் தாங்கமாட்டாமல் அங்கேயே கீழேவிழுந்து பிராணணை விட்டாள். கிளியும் பட்டியின் தோள்மீது சென்று உட்கார்ந்து கொண்டது.

பட்டியும் ஓகோ, இது நம் ராஜனின் லீலைதான் என்று புரிந்துகொண்டு, ராஜனைக்கூட்டிக்கொண்டு தன் ஊருக்குப்போனான்

1381
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]