குருபக்தியின் மகிமை | www.VijayTamil.Net

குருபக்தியின் மகிமை

Loading...

உதங்கர் கௌதம மகரிஷியின் சீடர். இவருடன் மற்றும் பல சீடர்களும் கல்வி அறிவு பெற்று வந்தனர். அவர்கள் அனைவருக்கும் கல்வி பூர்த்தியான பிறகு கௌதம மகரிஷி அவர்களைத் தத்தம் இல்லத்திற்கனுப்பி வைத்தார். ஆனால் கல்வியறிவு பூரணமான பிறகும் உதங்கரிடம் இருந்த அளவற்ற அன்பினால் அவரை மாத்திரம் தன்னுடனேயே இருத்திக் கொண்டார். உதங்கர் குருசேவையில் நன்கு ஈடுபட்டவராக இருந்ததால் தன்னை அனுப்பாததைப் பற்றித் தவறாக நினைக்கவே இல்லை. உதங்கர் ஒருநாள் குருதேவரின் யாக யக்ஞங்களுக்கென்று சமித்துகளைச் சேகரித்து, அவற்றை ஒரு மூட்டையாகக் கட்டித் தன் தலையில் சுமந்து வந்தார். மிகுந்த களைப்பினால் அம்மூட்டையை ஓரிடத்தில் இறக்கிவைத்தபோது அதில் தன் நரைத்த தலைமுடி இருந்ததைக் கண்ட பின்புதான் தான் வெகுநாள்களாகக் குருகுலத்திலேயே இருந்துவருவது பற்றி எண்ணலானார்.

‘வயது முதிர்ந்துவிட்டது, இன்னமும் குருநாதர் தனக்கு அருள் புரியவில்லையே’ என்று வருந்தினார். இதைக் கண்ணுற்ற கௌதமர் தன் சீடனின் மனநிலையை அறிந்து அவரிடம் “குழந்தாய்! உன் தன்னலமற்ற சேவையாலும், பணிவாலும், நல்ல கல்வி, பண்பு ஆகியவற்றாலும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததால் தான் இதுநாள் வரை உன்னை குருகுலத்திலேயே வைத்துக் கொண்டுவிட்டேன். வருந்தாதே. உன் இளமைப் பருவத்தைத் திரும்ப அடைவாய்” என்று அருள்புரிந்தார். அதேபோல உதங்கரும் தன் இளமையைத் திரும்பப் பெற்றார். கௌதமர் தம் மகளை அவருக்குத்திருமணம் செய்வித்தார்.

உதங்கர் குருநாதருக்குத் தக்க குரு தட்சிணை கொடுக்க விரும்பினார். ஆனால் கௌதமரோ அவருடைய பணிவிடைகளால் தாம் மிகவும் மகிழ்ச்சியும், திருப்தியும் அடைந்திருப்பதால் வேறு குருதட்சிணை ஒன்றும் வேண்டாம் என்று கூறினார். இதனால் மனச்சமாதானம் பெறாத உதங்கர், தம் குருபத்தினியான அகல்யா தேவியிடம் சென்று அவருக்குதான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.

அகல்யா தேவியும் முதலில் ஒன்றும் வேண்டாம் என்று சொன்னாலும் உதங்கரின் வற்புறுத்தலுக்கிணங்கி அவரிடம் “உதங்கா! அப்படி எனக்கு நீ ஏதேனும் கொடுத்துத்தான் ஆகவேண்டுமென்றால் அரசன் சௌதாஸனின் மனைவி மதயந்தியின் அபூர்வ சக்தி வாய்ந்த காதணிகளைப் பெற்று வா!” என்று சொன்னாள். அதுசமயம் கௌதமர் ஆசிரமத்தில் இல்லை. உதங்கர் குருபத்தினியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய சௌதாஸனைத் தேடிச் சென்றுவிட்டார்.

கௌதமர் ஆசிரமத்துக்குத் திரும்பியவுடன் அவரிடம் அகல்யா உதங்கரை மதயந்தியின் அபூர்வமான காதணிகளைப் பெற்றுவர அனுப்பியிருப்பதாகச் சொன்னாள். அதைக் கேட்ட கௌதமர் திடுக்கிட்டார். பிறகு அகல்யையிடம் “அந்தச் சௌதாஸன் ஓர் அரக்கனின் துரோகத்தால், தன் குலகுரு வசிஷ்டரால் சாபமிடப்பெற்று காட்டில் நரமாமிசம் தின்னும் ஓர் அரக்கனாகத் திரிந்து கொண்டிருக்கிறான். அவன் உதங்கரைக் கொன்று விடுவானே!” என்று மிகவும் வருத்தத்துடன் சொன்னார். அதைக்கேட்டு அகல்யையும் மிகுந்த வருத்தத்துக்குள்ளானாள்.

சௌதாஸனின் வரலாறு ஸ்ரீமத்பாகவதம், 9ஆவது ஸ்கந்தத்தில் சொல்லப்படுகிறது. சௌதாஸன் சூரிய குலத்திலுதித்த மன்னன். இவனால் ஓர் அரக்கன் கொல்லப்பட்டான். அவ்வரக்கனின் சகோதரன் சௌதாஸன் மீது வன்மம் கொண்டு அவன் மீது பழிதீர்த்துக் கொள்ள சமயம் பார்த்து இருந்தான்.

ஒரு சமயம் தன் குலகுரு வசிஷ்டருக்கு சௌதாஸன் விருந்தளிக்க ஏற்பாடு செய்தான். இவ்வரக்கன் ஒரு சமையல்காரன் போன்று அரசனின் அரண்மனையில் புகுந்து வசிஷ்டருக்கு என்று தயாரிக்கப்பட்டிருந்த உணவில் நரமாமிசத்தைக் கலந்துவிட்டான். வசிஷ்டர் உணவருந்த உட்காருகையில் இதை உணர்ந்து அரசன்தான் இதற்குக் காரணமென்று அரசன் மீது கோபம் கொண்டு அவனை நரமாமிசம் சாப்பிடும் ஓர் அரக்கனாகும்படி சாபமிட்டுவிட்டார்.

இக்கொடிய சாபத்தினால் பதறிய அரசன் தான் யாதொரு பாபமும் செய்யாதிருக்கையில், வசிஷ்டர் இவ்வளவு கொடிய சாபத்தைத் தனக்களித்ததற்காக வெகுண்டு அவருக்குப் பிரதிசாபமளிக்க முற்பட்டான். அவன் மனைவி மதயந்தி அரசனைச் சமாதானப்படுத்தவும் அவ்வரசன் தன் தவற்றை உணர்ந்து, வசிஷ்டருக்குச் சாபமளிப்பதற்காகக் கையில் எடுத்த தீர்த்தத்தை – வேறு யாருக்கும் அதனால் ஒரு கேடும் வரக்கூடாதென்ற நல்லெண்ணம் கொண்டு – தன் பாதங்களின் மீதே கொட்டி விட்டான். அதனால் அவன் பாதங்கள் கருமை நிறமாக மாறிவிட்டன. அதனால் அவன் ‘கல்மாவுபாதன்’ என்று பெயர் பெற்றான்.

வசிஷ்டரும் கருணை மேலிட்டு தன் சாபம் 12 ஆண்டுகளே இருக்கும் என்று சாபத்தின் காலத்தைக் குறைத்தார். அரசனும் சாபத்தின் விளைவாக நரமாமிசம் தின்னும் அரக்கனாகிக் கானகத்தில் திரிந்து கொண்டிருந்தான். இவனைப் பார்ப்பதற்காகத்தான் உதங்கர் காட்டிற்கு வந்தார்.

சௌதாஸன் உதங்கரைக் கண்டவுடன் அவரையும் கொன்று புசிக்க வந்தான். அவனை வணங்கி உதங்கர் தான் வந்த காரணத்தைச் சொல்லி அவன் உதவியை நாடினார். ஆனால் அவனோ அவர் வேண்டுதலுக்குச் செவிசாய்க்காமல் அவரைக் கொல்லவே முனைந்தான். அதன் மேல் உதங்கர் அவனிடம் மிகவும் நயமாகத் தனக்கு உதவும்படியும் தன் பணிகளை முடித்து விட்டுப் பிறகு அவனிடம் வந்து அவனுக்கு உணவாவதாகவும் சொல்லவும், அவனும் அதற்கிணங்கி, நாட்டிலுள்ள தன் மனைவி மதயந்தியிடம் சென்று காதணிகளைக் கொடுக்குமாறு தான் சொன்னதாக அவளிடம் கூறி அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு சொல்லி உதங்கரை அனுப்பி வைத்தான்.

உதங்கர் மதயந்தியிடம் சென்று அவள் கணவனின் விருப்பம் அவள் காதணிகளை உதங்கருக்குத்தர வேண்டுமென்பதாகச் சொன்னார். மதயந்தி அவரை நம்பமறுத்தாள். “என் காதணிகள் மிகவும் விசேஷமான சக்தியுடையவை. அவை உயர்ந்த ரத்தினக்கற்கள் கொண்டவை; அவை தங்கத்தை உண்டுபண்ணும்; இரவில் மிகப் பிரகாசமான ஒளியை உண்டாக்கும். அவை அணிபவரின் காதுகளின் தன்மைக்கேற்ப மாறும் சக்தியுடையவை. அவற்றை அணிபவர்க்குப் பசி, தாகம், எதிர்பாராத அபாயங்கள் ஏற்படா. இவ்வளவு மகிமை வாய்ந்த அக்காதணிகளைக் கவர்ந்து செல்ல, பல தேவர்கள், யக்ஷர்கள், நாகர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். அதனால் என் கணவரால் தான் என்னிடம் அனுப்பப்பட்டீர்கள் என்பதற்குத் தக்க சான்றளித்தால்தான் அவற்றைக் கொடுக்கமுடியும்” என்றாள்.

உதங்கர் மறுபடியும் சௌதாஸனிடம் சென்று விஷயத்தைக் கூறவும் அவன் “என் தற்போதைய நிலைமை சகிக்கவொண்ணாமல் இருக்கிறது. அந்தக் காதணிகளை தகுதியுடைய விளங்கும் ஓர் அந்தணருக்குத் தானம் செய்துவிட்டால் என் சாபத்திற்கு உள்ள தீவிரம் குறைந்து, சாபத்திலிருந்தும் விரைவில் விடுபட வாய்ப்பு உண்டு என்று தான் சொன்னதாக அவளிடம் கூறிவிட்டு, அவளிடமிருந்து காதணிகளைப் பெற்றுச் செல்லுமாறு சொன்னான்.

உதங்கர் சௌதாஸனிடம் “இப்போது நாமிருவரும் நண்பர்களாகிவிட்டோம். அதனால் நான் கடைப்பிடிக்க வேண்டிய மார்க்கத்தை என் நண்பனான நீங்கள் காட்டித்தர வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். சௌதாஸனும் வேறு வழியின்றி “நீ இனிமேல் என் முன்பாக வராதே; வந்தால் உனக்கு மரணம் நிச்சயம்” என்று சொன்னான். அதனால் அவ்வரக்கனின் வாக்கினாலேயே தனக்கு வரவிருந்த ஆபத்திலிருந்து தப்பினார்.

பிறகு மதயந்தியிடம் சென்று அவள் கணவன் தன்னிடம் கூறியதைச் சொல்லி, ஒருவாறாக அவளது ஐயத்தைப் போக்கி அவளிடமிருந்து அந்த அபூர்வமான காதணிகளைப் பெற்றார், உதங்கள்.

அவற்றை மிகவும் ஜாக்கிரதையாகத் தன் மான்தோலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு வந்தார். வரும் வழியில் பசியினால் ஒருமரத்தில் பழுத்திருந்த பழங்களைப் பறித்து உண்ண எண்ணம் கொண்டு அந்த மான் தோலை ஒரு மரக்கிளையில் மாட்டி விட்டுப் பழத்தைப் பறித்துக் கொண்டிருந்தபோது, அந்தான் தோலை நாகலோகத்திலிருந்து வந்த ஒரு நாகம் கைப்பற்றித் தன் உலகத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது.

உதங்கர் தன்னிடமிருந்த ஒரு கோலினால் அந்தப் பாம்புப் புற்றைத் தகர்த்து நாகலோகத்துக்குச் செல்ல முயன்றார். அவரிடம் இரக்கம் கொண்ட தேவேந்திரன் அக்கோலில் தன் வஜ்ராயுதத்தைச் செலுத்தி உதங்கர் நாகலோகத்துக்குச் செல்ல உதவினான். நாகலோகத்தில் அக்காதணிகளைக் கவர்ந்து சென்ற நாகத்தைக் காண முயன்றபோது அவரது குருகுல வாசம் சமயம் அவரால் மிகவும் போற்றிக் கவனமாய்ப் பாதுகாக்கப்பட்ட அக்னி பகவான் அவருடைய சேவையால் மகிழ்ந்தவராக அவருக்கு உதவியாக நாகலோகம் முழுவதும் புகைமண்டலத்தைப் பரப்பினார். மூச்சுவிடத் திணறிய நாகங்கள் உதங்கரிடம் அந்தக் காதணிகளைக் கொண்டு வந்து கொடுத்து தங்களை அக்னியிடமிருந்து பாதுகாத்துக்கொண்டன.

தேவேந்திரன், அக்னி பகவான் ஆகியவர்களுக்குத் தன் வந்தனத்தையும், வணக்கத்தையும் செலுத்திவிட்டு, உதங்கர் தம் குருநாதரின் ஆசிரமத்தைச் சென்றடைந்து குருநாதரான கௌதம முனிவரையும், குருபத்தினி அகல்யா வையும் வணங்கி விட்டு, அகல்யாவிடம் காதணிகளைச் சேர்ப்பித்தார்.

பிறகு அவ்விருவரின் ஆசிகளைப் பெற்றுத் தன் மனைவியுடன் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு கிருகஸ்தாஸ்ரம தர்மத்தைச் செவ்வனே அனுசரித்து வந்தார்.

உதங்கரின் குருபக்தி அவ்வளவு உயர்ந்ததாக இருந்தது. குருபக்திக்கும், குருசேவைக்கும் அவரது வாழ்க்கை ஓர் எடுத்துக் காட்டு. சௌதாஸன், மதயந்தி ஆகியவைப் பற்றி மிகச் சிலரே அறிவர். அதனால்தான் அவர் வரலாற்றை ஸ்ரீமத் பாகவத புராணத்திலிருந்து எடுத்து இங்கே சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

814
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]