பேஸ்புக் வளர்ச்சிக்கு என்ன காரணம்….? | www.VijayTamil.Net

பேஸ்புக் வளர்ச்சிக்கு என்ன காரணம்….?

Loading...

நிச்சயம் இவருக்குத் தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாது. தமிழ்ப் பெருங்கிழவி ஔவை பற்றியோ, அவள் அருளிய ஆத்திசூடி பற்றியோ, இந்த இளைஞர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், இவர் தன் வாழ்க்கையில் அடைந்திருக்கும் இந்த உயரத்துக்கும், இத்தனை வெற்றிகளுக்கும் காரணம் ஆத்திசூடியில் சொல்லப்பட்டிருக்கும் ‘நல்விதிகளில் ஐந்தை’ நேர்மையுடன் கடைப்பிடித்ததே.

fa

யார் இவர்? உலகின் இளம் பில்லியனர்களில் ஒருவரும், உலகின் நம்பர் 1 சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனருமான – மார்க் ஸுக்கர்பெர்க்.

‘மார்க் மை வேர்ட்ஸ்’ என ஔவை சொல்லி, மார்க்கின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அந்த ஐந்து நல்விதிகளை அவரது வெற்றிக் கதையுடன் சேர்த்தே பார்த்துவிடலாம்.

நியூயார்க் அருகில் உள்ள டாப்ஸ் ஃபெரி என்ற சிறு நகரத்தில் பல் மருத்துவராக இருந்தவர் எட்வர்டு. இவரது ஒரு வயது மகன் மார்க் ஸுக்கர்பெர்க் தத்தித் தத்தி நடக்கும் பருவத்தில் (1985), எட்வர்டு தனது கிளினிக்கில் புதிய கம்ப்யூட்டர்களை நிறுவினார். விவரம் அறியாத வயதிலேயே கம்ப்யூட்டர் ஸ்பரிசத்துடன் வளர்ந்தான் சிறுவன் மார்க். விளையும் பயிர் முளையிலேயே, தனி கம்ப்யூட்டர் கேட்டு அடம்பிடித்தது. சமாளிக்க முடியாமல் பெற்றோரும் வாங்கிக் கொடுத்தனர். 10 வயது மார்க், அதில் படம் வரைந்தான்; படம் பார்த்தான். வேறு என்ன செய்ய? ‘கம்ப்யூட்டர் போரடிக்குதுப்பா!’ என அலுத்துக்கொள்ள, ‘சி++ ஃபார் டம்மீஸ்’ என்ற புரோகிராமிங் புத்தகத்தை தன் மகனிடம் விளையாட்டாகத் தூக்கிக் கொடுத்தார் எட்வர்டு. மார்க், அதில் லயித்தான். புத்தகத்தைப் படித்துப் புரிந்துகொண்டு, சிறு சிறு புரோகிராம்கள் எழுத ஆரம்பித்தான். அந்த ‘விளையாட்டு’ அவனுக்குப் பிடித்திருந்தது. மகனின் ஆர்வத்தைக் கண்டுகொண்ட எட்வர்டு, அருகில் நடந்த ‘புரோகிராமிங் வகுப்பு’க்கு அனுப்பினார். பொடியனின் ஆர்வமும் திறமையும், வகுப்பில் இருந்த சீனியர்களைத் திகைக்கச் செய்தன.

‘அப்பா, உங்க கம்ப்யூட்டரையும் கிளினிக் ரிசப்ஷன்ல இருக்கிற கம்ப்யூட்டரையும் ஒரே நெட்வொர்க்ல கொண்டுவாங்க’ என மார்க் கட்டளையிட, எட்வர்டும் அப்படியே செய்தார். டாக்டரும் ரிசப்ஷனிஸ்ட்டும் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக்கொள்ளும்படி புதிய ‘சாட் புரோகிராம்’ எழுதி அசத்தினான் மார்க். இன்றைக்கு உலகையே ஃபேஸ்புக்கால் இணைத்துவைத்திருக்கும் மார்க் நிகழ்த்திய முதல் ‘சாட்’ அது.

வீடியோ கேம்ஸ்களில் மூழ்கிக்கிடக்கும் பதின் வயதில், மார்க் தன்னைப் போன்ற புரோகிராமிங் ஆர்வமுள்ள நண்பர்களுடன் சேர்ந்து புதிய கேம்ஸ்களை உருவாக்கினான். அதற்காக ‘புரோகிராமிங்தான் வாழ்க்கை’ என அவன் அப்போதே முடிவெடுக்கவில்லை. அது என்னவோ, செம்புலப் பெயல்நீர்போல, ‘பிஹெச்பி’யும் ‘சி ப்ளஸ் ப்ளஸ்’ஸும் அவனுள் இயல்பாகக் கலந்தன.

பள்ளி இறுதி ஆண்டில் ஒரு புராஜெக்ட் செய்ய வேண்டும். மார்க்கும் அவரது நண்பர் ஆடமும் இணைந்து ‘ஸினாப்ஸ்’ என்ற ஒரு புதிய மியூசிக் பிளேயரை உருவாக்கினார்கள். கம்ப்யூட்டரை உபயோகிப்பவர் என்ன மாதிரியான பாடல்களை அதிகம் விரும்பிக் கேட்கிறார் என அவரது ரசனையை ஸினாப்ஸ் மோப்பம் பிடித்துக்கொள்ளும். ஏற்கெனவே இருக்கும் பாடல்கள், புதிதாகச் சேர்க்கும் பாடல்கள் எல்லாவற்றிலும் இருந்து அவருக்குப் பிடித்த மாதிரியான பாடல்களைத் தானே தேர்ந்தெடுத்து, ‘ப்ளே லிஸ்ட்’ ஒன்றை உருவாக்கி ஒலிக்கச் செய்யும். பள்ளி அளவில் ஸினாப்ஸ் புகழ்பெற, மார்க்கும் ஆடமும் அதை இணையத்தில் இலவசமாக உலவ விட்டார்கள். உபயோகித்தவர்கள், உச்சி முகர்ந்து பாராட்டினார்கள்.

‘பள்ளிச் சிறுவர்’களின் அபாரத் திறமை, எட்டுத் திக்கும் எட்டியது. மைக்ரோசாஃப்ட் முதல் மியூசிக் மேட்ச் வரை, சிறிய பெரிய நிறுவனங்களின் ‘ஆஃபர் லெட்டர்’ இருவரது இன்பாக்ஸையும் தட்டியது. மார்க், சற்றே மிரளத்தான் செய்தார். ‘அதுக்குள்ளயா… அய்யோ, நான் காலேஜ் படிக்கணும்’! என நழுவினார். ‘சரி, ஒரு மில்லியன் டாலர் தர்றோம். அந்த ஸினாப்ஸை எங்ககிட்ட வித்துருங்க’ எனவும் கேட்டுப் பார்த்தார்கள். மைக்ரோசாஃப்ட் இரண்டு மில்லியன் தருவதாகவும் அழைத்தது. ஆனால், அங்கே மூன்று வருடம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன். மைக்ரோசாஃப்ட்டில் வேலை என்பது ஆகச்சிறந்த வெகுமதிதான். ஆனால், என் கல்லூரிக் கனவுகள்? கடும் குழப்பத்தில் தவித்த மார்க், இறுதியில் ‘குழந்தைத் தொழிலாளி’யாக மாற விரும்பாமல், ‘ஹார்வர்டு’ பல்கலைக் கழகத்தில் படிக்க விண்ணப்பித்தார்.

அங்கே ஒவ்வொரு செமஸ்டரின் ஆரம்பத்திலும், மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு உரிய பாடங்களைத் தேர்ந் தெடுக்க வேண்டும். தங்கள் நண்பர்கள், காதலிக்கத் துரத்தும் பெண்கள்/ஆண்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என விவரம் தெரிந்தால், தாங்களும் அங்கே நங்கூரமிடலாம் அல்லவா? அதைத் தொகுத்துச் சொல்லும் ஹார்வர்டுக்கு உரிய பொது இணையதளம் எதுவும் இல்லை. மாணவர்கள் தவித்தார்கள். அதற்காகவே மார்க், 2003-ம் ஆண்டு மத்தியில் ‘கோர்ஸ் மேட்ச்’ என்ற இணையதளத்தை இன்ஸ்டன்ட்டாக உருவாக்கினார். செம ஹிட். தளத்தை உருவாக்க எந்தவித டேட்டாபேஸும் மார்க்கிடம் கிடையாது. ஒவ்வொரு மாணவரும் தளத்தினுள் நுழைந்து, தங்கள் விவரங்களைத் தாங்களே பதிவுசெய்துகொண்டனர். புதிய டேட்டாபேஸ் உருவானது. கோர்ஸ் மேட்ச்-ன் இந்த மாடல்தான் ஃபேஸ்புக்கின் அடித்தளமும்கூட.

மார்க், ஃபேஸ்புக்கை நிறுவுவதற்கு பல ஆண்டுகள் முன்பே ஹார்வர்டில் ஒரு ‘ஃபேஸ்புக்’ புழக்கத்தில் இருந்தது. ஹார்வர்டு மாணவர்களின் சுயவிவரங்களும் புகைப்படங்களும் அச்சடிக்கப்பட்ட தொகுப்பு. இணைய வசதி வந்தபின் அவை டிஜிட்டல் வடிவில் கிடைத்தன. ஆனால், அவற்றை அந்தந்தத் துறை சார்ந்தவர்கள் மட்டுமே பார்க்க முடியும். மற்ற துறையினர் உள்ளே நுழைய முடியாது. செக்யூரிட்டி… பாஸ்வேர்டு… இத்யாதி.

‘மப்பும்’ மந்தாரமுமாக இருந்த ஒரு பொழுதில், மார்க்குக்கு ‘ஹார்வர்டிலேயே அழகான பெண் யார்… ஆண் யார்?’ என்பதைத் தேர்ந்தெடுக்கும் ஒரு புரோகிராம் எழுதும் கோக்குமாக்கு யோசனை தோன்றியது. நெட்வொர்க் வழியே ஹார்வர்டின் ஒவ்வொரு துறையில் இருந்தும் மாணவர்களின் விவரங்களைத் திருடினார். `ஃபேஷ்மேஷ்’ என்றொரு புரோகிராம் உருவாக்கினார். இரண்டு பெண்களின் (அல்லது ஆண்களின்) புகைப்படத்தை ஒப்பிட்டு யார் அழகானவர் எனத் தேர்ந்தெடுத்தால், தேர்ந்தெடுக்கப்படாத படம் மறைந்து அடுத்த படம் தோன்றும். இப்படியே ஓட்டு அளித்துக்கொண்டே செல்லலாம். மார்க், ஃபேஷ்மேஷை உருவாக்கி இணையத்தில் ஏற்றிய சில மணி நேரத்திலேயே, மாணவர்கள் அதை மொய்க்க ஆரம்பித்தனர். ஓட்டுகள் குவியக் குவிய, ஹார்வர்டின் இணைய இணைப்பு டிராஃபிக்கால் செயல் இழந்தது. மார்க்கும் அத்துடன் ஃபேஷ்மேஷுக்குத் திரை போட்டார். தனக்குள் முடிவெடுத்தார். குற்றமான விளையாட்டைச் செய்யாதே. `கோதாட்டு ஒழி’ .

சில நாட்களில் மார்க், பல்கலைக்கழகத்தின் விசாரணை வளையத்துக்குள் நிறுத்தப்பட்டார். புகைப்படங்களைத் திருடியது, இணைய இணைப்பைத் தவறாகப் பயன்படுத்தியது, அழகுக்கான ஓட்டு என்ற பெயரில் கறுப்பு இனத்தவரின் மனதைப் புண்படுத்தியது – இப்படிச் சில குற்றச்சாட்டுகள் பாய்ந்தன. புண்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட மார்க், ‘சாதாரண மாணவன் ஒருவன் தகவல்களை எளிதாகத் திருடும் அளவுக்குத்தான் பல்கலைக்கழகத்தின் இணையதளப் பாதுகாப்பு இருக்கிறது என்பதை உணர்த்தியிருக் கிறேன். அதற்காகப் பாராட்டுங்கள்’ என்றார் சாமர்த்தியமாக. தண்டனை இல்லாமல் தப்பித்தார்.

அடுத்ததாக மார்க், ஹார்வர்டு மாணவர் களுக்கான புதிய சோஷியல் நெட்வொர்க் தளம் ஒன்றை அமைக்கும் யோசனையில் இறங்கினார். `தூக்கி வினை செய்’ அந்தச் செயலை முடிக்க என்னவெல்லாம் தேவை எனத் தீவிரமாகத் திட்டமிட்ட பின்பே முனைப்புடன் களத்தில் இறங்கினார். ‘கோர்ஸ் மேட்சை’விட அதிகப் பயனுள்ளதாக, குறிப்பாக சாட்டிங்கில் தொடங்கி டேட்டிங் வரை புதிய தளம் மாணவர்களுக்குக் கைகொடுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் செயலாற்றினார். தளத்தினுள் நுழைய அடிப்படைத் தேவை ஹார்வர்டு இமெயில் கணக்கு. மாணவர்கள் சுய விவரங்களைத் தாங்களே இதில் பதிவுசெய்துகொள்ளலாம். அடுத்தவர்களின் தகவல்களை நோட்டம்விடலாம். ‘கொஞ்சம் படிக்கிறேன்’, ‘நீச்சல் அடிக்கிறேன்’, ‘காதலில் துடிக்கிறேன்’ என ஏதாவது ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் போடலாம்.

`thefacebook.com’ என, அந்தத் தளத்துக்காக இணையதள முகவரியை 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் பதிவுசெய்தார் மார்க். இரவு, பகல், பசி, தூக்கம் எல்லாம் மறந்து அடுத்த செமஸ்டர் தொடங்குவதற்கு முன்பாகவே தளத்தை இயக்கிவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் இயங்கினார். சமயங்களில் சாண் ஏறாமலேயே முழம் சறுக்கியது. அத்தனை ‘எரர்’. `இதெல்லாம் தேவையா… அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்’ என மார்க், தூக்கிப் போட்டுவிடவில்லை. `ஊக்கமது கைவிடேல்’ தன்னலம் இல்லாத உழைப்பைக் கொட்டி தளத்துக்கு உயிர்கொடுத்தார் மார்க்.

மார்க்கின் நண்பர் சாவ்ரின், தளத்தில் 1,000 டாலர் முதலீடு செய்ய, மாதத்துக்கு 85 டாலரில் தளத்துக்காக ஒரு சர்வரை வாடகைக்கு எடுத்தார்கள். அந்த பிப்ரவரி மாதம் 4-ம் தேதி மார்க், தனது ஹார்வர்டு இமெயில் மூலம் தி ஃபேஸ்புக்கின் முதல் உறுப்பினராகப் பதிவுசெய்தார். தளம் இயங்க ஆரம்பித்தது. ஆரம்பமே ரணகள ஹிட். ஒருசில நாட்களிலேயே ஹார்வர்டு வளாகத்தில் ‘ஹலோ’வுக்குப் பதிலாக, ‘நீ ஃபேஸ்புக்ல இருக்கியா?’ என எல்லோரும் கேட்டனர்.

ஹார்வர்டு பேராசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் உள்ளே ஊர்வலம் வர ஆரம்பித்தனர். ‘எங்க காலேஜுக்கும் இதே மாதிரி ஒரு வெப்சைட் தேவை… செஞ்சு தாங்க ப்ளீஸ்!’ என கோரிக்கைகள் மார்க்கை மொய்த்தன. இரண்டே மாதங்களில் அமெரிக்காவின் முக்கியமான கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் ஃபேஸ்புக்கின் நீலக்கொடி. ஏற்கெனவே ஏதாவது ஒரு சமூக வலைதளம் கால் பதித்திருந்த கல்லூரிகளில்கூட ஃபேஸ்புக் நுழைந்து அரியணையைப் பிடித்தது. பணம் போட்ட சாவ்ரின், விளம்பரங்கள் வெளியிட்டு பணம் சம்பாதிக்கவும் நினைத்தார். அதற்கு மார்க் சம்மதிக்கவில்லை. ‘இது ஜாலியான தளம். இன்னும் பல லட்சம் பேரைச் சென்றடைய வேண்டும். விளம்பரங்கள், உறுப்பினர்களுக்கு எரிச்சல் தரும். அதனால் ஃபேஸ்புக்கின் இமேஜ் கெடும்’ என்றார் தீர்க்கமாக. பின்பு உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிக்கொண்டே சென்றதால், செலவினங் களைக் கட்டுப்படுத்த, சிறிய வகை விளம்பரங் களை, உறுப்பினர்களைத் தொந்தரவு செய்யாத விதத்தில் வெளியிட அனுமதித்தார்.

ஃபேஸ்புக்கை லபக்கிக்கொள்ள சிறிய, பெரிய நிறுவனங்களின் தூண்டில்கள் நீண்டன. மார்க் எதிலும் சிக்கிக்கொள்ளவில்லை. ‘இந்த புராஜெக்ட் எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்கே சலிப்புத்தட்டும் வரை இதை மென்மேலும் விரிவடையச் செய்வதில்தான் முழுக் கவனம் செலுத்தப்போகிறேன். இதை விற்பது குறித்தோ, பணம் சம்பாதிப்பது குறித்தோ கொஞ்சமும் யோசிக்கவில்லை’ என்றார்.

அந்த விடுமுறை காலத்தில், சீன் பார்க்கர் என்பவருடன் கைகோத்தார் மார்க். ஃபேஸ்புக்கின் அடுத்தகட்ட வளர்ச்சி அப்போது தொடங்கியது. பார்க்கர், இதே துறையில் சில தோல்விகளைக் கண்ட அனுபவஸ்தர்; ஆனால், திறமைசாலி. ‘இப்போது சிறிய அளவில் இருந்தாலும் ஃபேஸ்புக் ஒருநாள் உலகத்தையே தன் பிடிக்குள் கொண்டுவந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு நிறைய முதலீடு தேவை’ என வருங்காலத்தைச் சிந்தித்த பார்க்கர், புதிய முதலீட்டாளர்களை அழைத்துவந்தார். முதல் கட்டமாக ஆறு லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு கிடைத்தது. ஃபேஸ்புக்கின் புதிய தலைமைப் பொறுப்பாளராக பார்க்கர் பொறுப்பேற்றார். ஃபேஸ்புக்கில் வேறென்ன புதிய வசதிகள் சேர்த்து உலகத்தை வளைக்கலாம் என இரவு-பகலாக கோடிங் சிந்தினார் மார்க்.

விடுமுறை காலம் முடிந்தது. ஹார்வர்டுக்குத் திரும்பிச் சென்று படிப்பைத் தொடரலாமா…இல்லை ஃபேஸ்புக்கை நம்பி படிப்பை விட்டு விடலாமா? – குழப்பத்தில் தவித்தபோது, ஹார்வர்டின் பழைய மாணவரான பில்கேட்ஸ் ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சு, மார்க்கின் நினைவுக்கு வந்தது. ‘உங்கள் மனதில் ஏதாவது புது புராஜெக்ட் இருந்தால், அதில் முழுக் கவனம் செலுத்துங்கள். தேவைப்பட்டால், படிப்பைப் பிறகுகூட தொடரலாம். ஹார்வர்டில் அந்த வசதி உண்டு. ஒருவேளை வருங்காலத்தில் மைக்ரோசாஃப்ட் படுத்துவிட்டால், நான்கூட ஹார்வர்டுக்கு வந்து படிப்பைத் தொடர்வேன்’ என்றார் பில்கேட்ஸ். மார்க்கும் அதே முடிவெடுத்தார். தேவைப்படும் வரை ஃபேஸ்புக் குக்காக உழைப்பது, அதற்குப் பின் ஹார்வர்டுக்குத் திரும்பி வந்து படிப்பைத் தொடர்வது.

மார்க்கின் உடல், உயிர், நாடி, நரம்பு, ரத்தம், சதை, சிந்தனை, செயல் அனைத்திலும் ஃபேஸ்புக் நீக்கமற நிறைய… அதில் புதிய புதிய வசதிகள் பிறந்தன. அமெரிக்க இளைஞர் கூட்டம் ஃபேஸ்புக் போதையில் மணிக்கணக்கில் திளைத்தது. 2004-ம் ஆண்டு அக்டோபரில் அரை மில்லியன் உறுப்பினர்கள். அடுத்த ஆறே மாதங்களில் ஐந்து மில்லியன். எல்லோருக்கும் எல்லா விளம்பரங்களும் தோன்றி எரிச்சல்படுத்தாமல், ஏரியா வாரியாக குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மட்டும் சென்று சேரும் லோக்கல் விளம்பரங்களை வெளியிட வழிவகுத்தார் மார்க். அது வருமான வாய்ப்புகளைக் கொட்டியது. thefacebook.com என்பது facebook.com ஆகப் பெயரில் சுருங்கி, புகழில் பரந்து விரிந்தது.

பெரிய நிறுவனங்கள், ஃபேஸ்புக்குக்கு 500 மில்லியன், 600 மில்லியன் என்ற விலையுடனும் வலையுடனும் சுற்றிச் சுற்றி வந்தன. `மாற்றானுக்கு இடம் கொடேல்’! மார்க் அசைந்துகொடுக்கவில்லை. ‘சம்பாதிப்பதோ, பணத்தைக் குவிப்பதோ, எல்லோராலும் இயலும் காரியமே. ஆனால், ஃபேஸ்புக் போன்றொரு ஹிட் சமூக வலைதளத்தை எல்லோராலும் உருவாக்க இயலாது. இதை நான் விற்க மாட்டேன்’ எனத் தீர்க்கமான முடிவுடன் இருந்தார் மார்க். ஃபேஸ்புக்கின் நிர்வாக அதிகாரம் தன் கையில் இருந்தால்தான் தான் நினைத்ததை முழுமையாகச் சாதிக்க முடியும் என்ற சிந்தனைத் தெளிவு மார்க்கிடம் இருந்தது. மார்க்கின் வலதுகை யாகச் செயல்பட்ட பார்க்கர், வெளி முதலீடுகளைக் கொண்டுவந்து கொட்டினார். அதே சமயம் மார்க்கின் அதிகாரத்துக்கு இடையூறு வராத வகையில் கவனித்துக்கொண்டார்.

2006-ம் ஆண்டு செப்டம்பரில், மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் பொதுமக்களுக்கான சேவையையும் ஆரம்பித்தது ஃபேஸ்புக். 2007-ம் ஆண்டு, நிறுவனங்களுக்கான பிசினஸ் பக்கங்கள் தொடங்கப்பட்டன. அடுத்தடுத்து ஃபேஸ்புக் வால், நியூஸ் பீட், போட்டோ ஷேரிங், கேம்ஸ், குரூப்ஸ் எனப் புதிய வசதிகள் பளபளக்க, சமூகம் அள்ளி அணைத்து ‘லைக்’கிட்டு, அபாரம் என ‘கமென்ட்’ போட்டு, ‘ஃபேஸ்புக்குக்கு நீங்க வாங்க’ என தங்கள் கருத்துகளை எங்கெங்கும் ‘ஷேர்’ செய்ய ஆரம்பித்தது. ‘ஃபேஸ்புக்கை ஆரம்பிக்கும்போது அதற்குப் பின் இத்தனை பெரிய வியாபார வாய்ப்பு இருப்பதாக நான் சத்தியமாக நினைக்கவில்லை’ என பிறகு சொன்னார் மார்க்.
இருந்தாலும் உறுப்பினர்களின் அந்தரங்கத் தகவல்கள் மற்றவர்களுக்குக் கசிந்துவிடுமோ என்ற சந்தேகம் வலுப்பெற்றது. மார்க் தெளிவாகப் பதிலளித்தார், ‘கசியாது… கசியவும்விட மாட்டோம்.’ அதற்கு ஏற்ப புதிய, பயனுள்ள பிரைவசி செட்டிங்களையும் கொண்டுவந்து நம்பிக்கையைப் பலப்படுத்தினார். கண்டம்விட்டுக் கண்டம், நாடுவிட்டு நாடு ஃபேஸ்புக்கின் கிளை பரவியது. 2009-ம் ஆண்டு மொபைல் போனில் ஃபேஸ்புக்கை உபயோகிப்போர் சதவிகிதம் உயர ஆரம்பித்தது. 2011-ம் ஆண்டு கூகுளுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச பயனாளர்களைக்கொண்ட தளமாக புன்னகை சூடியது ஃபேஸ்புக். 2008-ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலுக்கு, பின் 2011-ம் ஆண்டு எகிப்தியப் புரட்சிக்கு ஃபேஸ்புக் தான் கொ.ப.செ! மாபெரும் சமூக மாற்றங்கள் இப்போது ஃபேஸ்புக்கில் இருந்தும் தொடங்குகின்றன. நம் சமூகத்திலும் திராவிடத் தலைவர் தொடங்கி தெருவோர வியாபாரி வரை அனைவருக்கும் முகநூல் தனி முகவரி.

ஃபேஸ்புக்கில் போலியான பெயர்களில் திரியும் விஷமிகள், ஃபேஸ்புக்கின் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி, மோசடிகளை அரங்கேற்றும் ஏமாற்றுப் பேர்வழிகள், அவை குறித்த வழக்குகள், பயனாளிகளின் தகவல்கள் திருட்டுப்போவது, அதற்காக ஃபேஸ்புக் வழக்குகளைச் சந்தித்து நஷ்டம் வழங்குவது, ஃபேஸ்புக் மூலம் அரசாங்கத் துக்குத் தகவல் கொடுக்கப்படுவது, இப்படி முகநூலின் குறும்புப் பக்கங்களுக்கும் குறைவு இல்லை. அதனால் மார்க் சந்திக்கும் தலைவலிகளும் ஏராளம். இதையெல்லாம் அமைதியாகச் சமாளித்துவிட்டு, அடுத்தடுத்த இலக்குகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மார்க் அடிக்கடி தனக்குள் சொல்லிக்கொள்ளும் வாசகம், ‘மிகப் பெரிய ரிஸ்க் எதுவென்றால், எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் இருப்பதே!’

2014, டிசம்பர் கணக்குப்படி 1,390 மில்லியன் பயனாளர்களுடன் அசுர பலத்துடன் வலம்வருகிறது ஃபேஸ்புக். உலகின் இளம் பில்லினியர்களில் ஒருவரான மார்க்கின், 2015-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரச் சொத்து மதிப்பு சுமார் 2 லட்சம் கோடி ரூபாயைவிட அதிகம். இன்றைய தேதியில் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய வெற்றியாளர். அதையெல்லாம் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் தன் சாதனை குறித்து மார்க் சொல்லும் வார்த்தைகள் மிக எளிமையானவை.

‘பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் தொடர்பில் இருக்க உதவுவது என்பது ஆச்சர்யமான விஷயம். அதைச் சாத்தியப்படுத்தியதை என் வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்!’

224
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]