ஐப்பசி மாத ராசிபலன்கள் | www.VijayTamil.Net

ஐப்பசி மாத ராசிபலன்கள்

Loading...

raa

மேஷம்

மனிதர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ளவர்களே!

துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமை தாங்கிகளே!

உங்கள் ராசிக்கு சுக்கிரன் 8வது வீட்டிலே மறைந்து தன ஸ்தானத்தை பார்ப்பதனால் இந்த மாதத்தில் உங்களுக்கு பணவரவு உண்டு.

சாதுர்யமாகப் பேசி சில காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள்.

எதிர்ப்புகளெல்லாம் குறையும். சுக்கிரன் சனியுடன் இருப்பதாலும், அஷ்டமத்துச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதனாலும் ஜாமீன் கையெழுத்து யாருக்கும் இட வேண்டாம், பணம் வாங்கித் தருவதில் யாருக்கும் குறுக்கே நிற்க வேண்டாம்.

உங்களுடைய ராசிநாதனாகிய செவ்வாய் அக்டோபர் 24ம் தேதி வரை ராசிக்கு 9ம் வீட்டில் நின்று கொண்டிருப்பதனால் தந்தையாருடன் சின்னச் சின்ன கருத்து மோதல்களெல்லாம் வரும்.

தந்தை வழி உறவினர்களால் செலவுகளும் இருந்து கொண்டிருக்கும்.

ஆனால், அக்டோபர் 25ம் தேதி முதல்ராசிநாதனாகிய செவ்வாய் 10ம் வீட்டிலே கேந்திர பலம் பெற்று உச்சமாகி அமர்வதனால் செல்வாக்கு கூடும்.

பதவிகள் தேடி வரும். ஐந்தில் ராகு அமர்ந்து, ஐந்திற்குரிய கிரகம் சூரியன் நீச்சமாகிக் கிடப்பதால் பிள்ளைகளால் அலைச்சல்களும், செலவினங்களும் இருக்கும், பிள்ளைகளுடன் கருத்து, மோதல்களும் வரும்.

பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது மிகவும் நல்லது. குரு 6வது வீட்டிலே நின்று கொண்டிருப்பதனால் உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்த முயல்வார்கள் கவனமாக இருங்கள்.

அரசியல்வாதிகளே! அஷ்டமத்துச்சனி இருப்பதால் கோஷ்டிப் பூசல் வந்து நீங்கும். தலைமைக்கு நெருக்கமானவர்களின் நட்பு கிடைக்கும்.

மாணவர்களே! கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களை தவிர்த்து விடுங்கள்.

படிப்பிலே கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். அலட்சியம் வேண்டாம். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதனால் விடைகளை எழுதிப் பார்ப்பது நல்லது.

பெண்களே! இந்த மாதம் முழுக்க சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

வியாபாரத்தில் இந்த மாதம் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

பதினோறாம் இடத்தில் கேது நின்று கொண்டிருப்பதனால் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அஷ்டமத்துச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் பங்குதாரர்கள், வேலையாட்களின் ஒத்துழைப்பு குறைவாகத்தான் இருக்கும்.

உணவு, கட்டுமானப் பொருட்கள், வாகன வகைகள் மூலமாக லாபம் வந்து சேரும். வியாபாரத்தை விரிவுபடுத்த சில உதவிகளும் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

அக்டோபர் 25ம் தேதி உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10ம் வீட்டிலே அமர்வதனால் உத்யோகத்திலே செல்வாக்கு கூடும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். சம்பள பாக்கித் தொகை கைக்கு வரும். உங்களுடைய ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். கலைஞர்களே! தெலுங்கு மொழி பேசுபவர்களால் உங்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும்.

விவசாயிகளே! வாய்க்கால், வரப்பு தகராறை பெரிது படுத்தாதீர்கள். பூச்சி, எலித்தொல்லை வந்து நீங்கும். மரப்பயிர்களால் ஆதாயமடைவீர்கள்.

ஆகமொத்தம் இந்த மாதம் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து விட்டு சற்றே சிக்கனமாகவும், நாவடக்கத்துடனும் செயல்படும் மாதமாகவும் உங்களுக்கு அமைகிறது.

ராசியான தேதிகள்

அக்டோபர் 19, 20, 22, 28, 29, 30, 31 நவம்பர் 9, 10.

சந்திராஷ்டமம்

நவம்பர் 1ம் தேதி காலை 8.30மணி முதல் 2,3ம் தேதி இரவு 7.30மணி வரை.

பரிகாரம்

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருபுவனம் சரபேஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

ரிஷபம்

மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் நீங்கள், நல்லது கெட்டது அனைத்தையும் அனுசரித்துச் செல்பவர்கள். அக்டோபர் 24ம் தேதி வரை உங்களுடைய ராசிக்கு 8வது வீட்டில் செவ்வாய் மறைந்திருப்பதனால் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

சிறுசிறு விபத்துகள் வாகனப் பழுதுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அக்டோபர் அக்டோபர் 25ம் தேதி முதல்செவ்வாய் உச்சம் பெற்று 9வது வீட்டிலே உச்சம் பெற்று அமர்வதனால் மனைவி வழியில் உதவிகள் உண்டு.

மனைவிக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. உங்கள் ராசிநாதனாகிய சுக்கிரன் சனியுடன் சேர்ந்து நின்று கொண்டிருப்பதனால் மூச்சுத் திணறல், அலர்ஜி வந்து நீங்கும். வாயுப் பதார்த்தங்களை நீங்கள் தவிர்ப்பது நல்லது. வாயுக்கோளாறால் நெஞ்சு வலிக்கும்.

பயந்து விடாதீர்கள். வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வாகன வசதியும் பெருகும். அக்டோபர் 8ம் தேதி முதல் 8வது வீட்டிலே சுக்கிரன் மறைவதால் தீடீர் பயணங்கள், அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

கண்டகச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மனைவிக்கு லேசாக தலைச்சுற்றல் எல்லாம் வந்துநீங்கும்.

நவம்பர் 3ம் தேதி வரை புதன் 6வது வீட்டில் நின்று கொண்டிருப்பதனால் பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் இருக்கும். சுகாதிபதி சூரியனும் நீசமாகி இருப்பதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும்.

தாயாருடன் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குரு 5வது வீட்டிலே நிற்பதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வி.ஐ.பிகளும் அறிமுகமாவார்கள்.

அரசியல்வாதிகளே! எதிர்கட்சியினரை நாகரீகமாக தாக்கிப் பேசுவது நல்லது. பொதுமக்கள் மத்தியிலே மாதத்தின் பிற்பகுதியில் செல்வாக்கு கூடும்.

மாணவர்களே! சனிபகவான் ராசியை பார்த்துக் கொண்டிருப்பதனால் மறதி அதிகரிக்கும். விடைகளை எழுதிப் பார்ப்பது நல்லது.

பெண்களே! பழைய நண்பர்களை மறந்து விடாதீர்கள். காதல் விவகாரங்களை தள்ளி வைத்து விட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்தப் பாருங்கள்.

வியாபாரத்தில் மாதத்தின் மத்திய பகுதியிலிருந்து வியாபாரம் சூடு பிடிக்கும். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளெல்லாம் வசூலாகும்.

மாதத்தின் பிற்பகுதியில் புது ஒப்பந்தங்கள் கூடி வரவும் வாய்ப்பிருக்கிறது. கமிஷன், புரோக்கரேஜ், எலக்ட்ரானிக்ஸ் வகைகளால் லாபம் கூடும்.

குரு சாதகமாக இருப்பதனால் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. கண்டகச் சனி தொடர்வதால் கூட்டுத் தொழிலை தவிர்க்கப் பாருங்கள்.

கலைஞர்களே! சின்னச் சின்ன வாய்ப்புகள் வந்தாலும் மறுக்காமல் ஏற்றுக் கொள்வது நல்லது. யதார்த்தமான படைப்புகளை கொடுக்கப் பாருங்கள்.

விவசாயிகளே! ஆர்கானிக் காய்கறிகள் மூலமாக ஆதாயமடைவீர்கள். கரும்பு, தேக்கு மூலமாகவும் பணம் வரும். பழைய வங்கிக் கடன் தீரும். ஆகமொத்தம் இந்த மாதம் முற்பகுதியில் உங்களுக்கு வேலைச்சுமையும், அலைச்சலையும் தந்தாலும் மையப்பகுதியில் மகிழ்ச்சியூட்டக் கூடியதாக அமையும்.

ராசியான தேதிகள்

அக்டோபர் 21, 22, 23, 24, 26, 30 நவம்பர் 2, 9, 10, 11, 12.

சந்திராஷ்டமம்

நவம்பர் 3ம் தேதி இரவு 7.30மணி முதல் 4, 5ம் தேதி வரை.

பரிகாரம்

பிள்ளையார்பட்டி விநாயகரை தரிசித்து வாருங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

மிதுனம்

எந்த வேலையில் ஈடுபட்டாலும் முறைப்படி அதை முழுமையாகச் செய்து முடிக்கும் நீங்கள், நல்லது, கெட்டது தெரிந்து செயல்படக் கூடியவர்கள்.

உங்களுடைய ராசிக்கு 3வது வீட்டில் ராகுவும், 6வது வீட்டிலே சனியும் நின்று கொண்டிருப்பதால் எத்தனை இடர்ப்பாடுகள் வந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி வெற்றி பெறக்கூடிய அமைப்பு உங்களுக்கு உண்டாகும்.

புதிய முயற்சிகள் யாவுமே பலிதமாகும். பணவரவும் திருப்திகரமாக இருக்கும். பிரபலங்களும் அறிமுகமாவார்கள்.

எதிர்பார்த்து ஏமாந்து போன தொகையும் கைக்கு வரும். ஆனால், உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியாகிய சுக்கிரன் நவம்பர் 7ம் தேதி வரை 6வது வீட்டில் மறைந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருந்து கொண்டிருக்கும்.

நவம்பர் 8 முதல் சுக்கிரன் 7ம் வீட்டிற்குள் அமாந்து உங்கள் ராசியை பார்ப்பதனால் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

செவ்வாயின் போக்கு இந்த மாதம் முழுக்க சரியில்லாததால் சகோதர, சகோதரிகளுடன் மனக்கசப்பு வரும்.

சொத்துப் பிரச்னை தலைதூக்கும். எதுவாக இருந்தாலும் சுமுகமாகப் பேசி தீர்க்கப் பாருங்கள். அக்டோபர் 25ம் தேதி முதல் செவ்வாய் 8ல் சென்று மறைவதால் பணத்தட்டுப்பாடு ஏற்படும்.

மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையெழுத்து இட வேண்டாம். எதிலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மின்சார சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள்.

வாகனத்தில் அதிகம் வேகம் வேண்டாம். தைரிய ஸ்தானாதிபதி சூரியன் 5வது வீட்டிலே நீசமாகி கிடப்பதால் மனதிலே இனம் தெரியாத ஒருவித பயம் வந்து நீங்கும்.

கனவுத் தொல்லை வந்துபோகும். குரு நான்காவது வீட்டில் நின்று கொண்டிருப்பதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசல்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தலைமையை எதிர்த்துக் கொள்ள வேண்டாம். மாவட்டம், வட்ட கட்சியாளர்களிடம் அனுசரித்துப் போவது நல்லது.

மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அலட்சியமாக இருக்க வேண்டாம். ஆசிரியர்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப நீங்கள் கேள்விகளை கேட்பது நல்லது. பெண்களே!

மாதத்தின் பிற்பகுதியில்தான் உங்களுக்கு எல்லாம் சரியாகும். மாதவிடாய்க் கோளாறு, அலர்ஜி வந்து நீங்கும். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வெடிக்கும்.

வியாபாரத்தில் இந்த மாதம் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருக்கிறது.

முன் கோபத்தை தவிர்க்கப் பாருங்கள். உணவு, எரிபொருள், கமிஷன் வகைகளால் லாபம் வரும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள் ஆனால், முக்கியமான வேலை இருக்கும்போது விடுப்பில் செல்வார்கள்.

உத்யோகத்தில் வேலைச்சுமை கூடிக்கொண்டே போகும். சக ஊழியர்களை முழுமையாக நம்பி எதிலும் இறங்க வேண்டாம். எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது.

கலைஞர்களே! புது முயற்சிகள் பலிதமாகும். சம்பளபாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! மரப் பயிரால் லாபம் உண்டு. நெற்பயிரில் பூச்சி வர வாய்ப்பிருக்கிறது.

கவனமாக இருங்கள். ஆகமொத்தம் இந்த மாதம் எங்கும், எதிலும் எச்சரிக்கை உணர்வுடனும், சற்றே நாவடக்கத்துடன் செயல்பட வேண்டிய மாதமாக அமையும்.

ராசியான தேதிகள்

அக்டோபர் 17, 18, 23, 24, 25, 26 நவம்பர் 2, 3, 4, 5, 11, 12, 13, 14.

சந்திராஷ்டமம்

நவம்பர் 6, 7, 8ம் தேதி நண்பகல் 12.30மணி வரை.

பரிகாரம்

உங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். கோயில் உழவாரப்பணியை மேற்கொள்ளுங்கள்.

கடகம்

எறும்பைப் போல் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படும் நீங்கள், மற்றவர்களையும் பரபரப்பாக இயங்க வைப்பதில் வல்லவர்கள்.

ஊர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியாக இருக்கும் செவ்வாய் சாதகமான வீடுகளிலே சென்று கொண்டிருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும்.

எதிர்பார்த்த தொகையும் கைக்கு வரும். சிலருக்கு ஷேர் மார்க்கெட் மூலமாகவும் பணம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த சொத்து சம்மந்தப்பட்ட வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனையும் அமையும். பெற்றோருடன் இருந்து வந்த மனத்தாங்களெல்லாம் நீங்கும். வீடு மாறுவது, வீடு கட்டுவது, வீடு விற்பது போன்றவையெல்லாம் நல்ல விதத்திலே முடிவடையும்.

பிள்ளைகளின் பிடிவாத போக்கு மாறும். தந்தையின் சொத்துக்கள் கைக்கு வரும். நவம்பர் 7ம் தேதி வரை சுக்கிரன் 5வது வீட்டிலே நின்று கொண்டிருப்பதால் மகளுக்கு நல்ல வரன் அமையும்;

மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், நவம்பர் 8ம் தேதி முதல் சுக்கிரன் 6ம் வீட்டில் சென்று மறைவதனால் வாகனம் பழுதாகும்.

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களையும் கவனமாகக் கையாளுங்கள். தனாதிபதி சூரியனும் நீசமாகியிருப்பதால் செலவுகள் அடுக்கடுக்காக வந்து கொண்டேயிருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள்.

அரசு காரியங்கள் தடைபட்டு முடியும். புதன் உங்கள் ராசிக்கு சாதகமாக செல்வதால் நட்பு வட்டம் விரிவடையும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள்.

சனி 5வது வீட்டிலே தொடர்வதால் உறவினர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், நீங்கள் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது.

ராகுவும், கேதுவும் சரியில்லாமல் இருப்பதனால் உங்களைப்பற்றிய விமர்சனங்கள் வெளிவட்டாரத்தில் அதிகமாக இருக்கும் அதற்கு முக்கியத்துவம் தந்து கொண்டிருக்க வேண்டாம்.

குரு 3வது வீட்டில் நின்று கொண்டிருப்பதால் திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது.

அரசியல்வாதிகளே! எதிர்கட்சிகாரர்களை தாக்கிப் பேசுவதை விட்டுவிட்டு தொகுதி மக்கள் விஷயத்திலே அக்கறை காட்டுவது நல்லது.

மாணவர்களே! கணிதப் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எந்த சந்தேகமாக இருந்தாலும் தயக்கமில்லாமல் கேட்டு தீர்த்துக் கொள்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் உண்டு.

பெண்களே! வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்றாற் போல புது முதலீடுகளும் செய்வீர்கள்.

ரியல் எஸ்டேட், கட்டுமானப் பொருட்கள் வகைகளால் லாபம் அதிகரிக்கும். உணவு, போர்டிங், லாட்ஜிங் வகைகளாலும் லாபம் அதிகமாகும்.

புது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க தள்ளுபடி விற்பனை செய்வீர்கள். பழைய சரக்குகளும் விற்றுத் தீரும். வேலையாட்கள், பங்குதாரர்கள் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

உத்யோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கூடுதல் சலுகைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், மாதத்தின் பிற்பகுதியில் சின்னச் சின்ன வீண்பழி வந்து நீங்கும்.

கலைஞர்களே! உங்கள் படைப்புகள் பாராட்டி பேசப்படும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும்.

விவசாயிகளே! மகசூல் பெருகும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். இந்த மாதம் உங்கள் வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாகவும், செல்வாக்குகளை உயர்த்துவதாகவும் அமையும்.

ராசியான தேதிகள்

அக்டோபர் 17, 19, 25, 26, 27, 28, 29 நவம்பர் 4, 5, 6, 7, 13, 14.

சந்திராஷ்டமம்

நவம்பர் 8ம் தேதி நண்பகல் 12.30மணி முதல் 9, 10ம் தேதி மாலை 5.30 மணி வரை.

பரிகாரம்

திருநெல்வேலி காந்திமதியை தரிசித்து விட்டு வாருங்கள். முதியோர் இல்லத்திற்குச் சென்று உதவுங்கள்.

சிம்மம்

நல்ல நிர்வாகத் திறமையும், பரந்த அறிவுத் திறனும் கொண்ட நீங்கள், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றுவதில் வல்லவர்கள்.

உங்கள் ராசிக்கு தனஸ்தானத்திலே குருபகவான் நின்று கொண்டிருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

சாதுர்யமாகப் பேசி முக்கியமான வேலைகளெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். வெளிவட்டாரத்திலே செல்வாக்கு உயரும்.

ராசிநாதனான சூரியன் நீசமாகி 3வது வீட்டிலே நின்று கொண்டிருப்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்புகளெல்லாம் வந்து நீங்கும்.

வேலைச்சுமையும் கூடிக்கொண்டே போகும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். அரசு காரியங்களும் தடைபட்டு முடியும்.

கைவலி, காது வலி வந்து நீங்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் கடந்த காலத்தில் எதிர்பார்த்து ஏமாந்து போன தொகை இப்போது கைக்கு வர வாய்ப்பிருக்கிறது. மூத்த சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் மனைவி வழியிலே உதவிகள் உண்டு. வாகனம் புதிதாக வாங்குவீர்கள்.

உங்கள் பிரபலயோகாதிபதி செவ்வாய் அக்டோபர் 25ம் தேதி முதல் 6வது வீட்டில் வந்தமர்வதனால் செல்வாக்கு கூடும்.

புறநகர் பகுதியிலிருக்கும் இடத்தை விற்றுவிட்டு நகரத்தில் வீடு வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பெற்றோரின் உடல்நிலை சீராகும்.

பெற்றோருடன் இருந்து வந்த மனக்கசப்பும் தீரும். அர்த்தாஷ்டமத்துச் சனி சென்று கொண்டிருப்பதனால் அவ்வப்போது ஒருவித சலிப்பும், வெறுப்பும் வந்துபோகும்.

ராகு, கேதுவும் சரியில்லாமல் இருப்பதனால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். மூட்டு வலி, முதுகு வலி வந்து நீங்கும்.

அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். மாவட்ட அளவில் கூடுதல் பெறுப்பும், பதவிகளும் தேடி வரும்.

மாணவர்களே! படிப்பிலே ஆர்வம் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

பெண்களே! உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும்.

வியாபாரத்தில் கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளும் வசூலாகும். வாடிக்கையாளர்களுடைய எண்ணிக்கை அதிகமாகும்.

ஏற்றுமதி, இறக்குமதி வாகன வகைகள் மூலமாக லாபம் அதிரிக்கும். வேலையாட்கள், பங்குதாரர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சகஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது சலுகைகளும் கிடைக்கும். கலைஞர்களே! புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு பரிசும் பாராட்டும் கிடைக்கும்.

விவசாயிகளே! மாற்றுப் பயிர் மூலமாக ஆதாயமடைவீர்கள். நிலம் சம்மந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். இந்த மாதம் எதிர்பாராத திடீர் திருப்பங்களும், யோகங்களும் தருவதாக அமையும்.

ராசியான தேதிகள்

அக்டோபர் 19, 20, 21, 22, 28, 29, 30, 31 நவம்பர் 6, 7, 8, 9, 15.

சந்திராஷ்டமம்

நவம்பர் 10ம் தேதி மாலை 5.30 மணி முதல் 11,12ம் தேதி இரவு 8.30மணி வரை.

பரிகாரம்

திண்டிவனம் திந்திரிணீஸ்வரரை தரிசித்து வாருங்கள். தந்தை வழி, தாய் வழி உறவினர்களுக்கு ஏதாவது ஒருவகையில் உதவி செய்யுங்கள்.

கன்னி

எல்லையில்லா அன்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நீங்கள்தான், மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்கள். மற்றவர்களின் ரகசியங்களை கட்டிக் காப்பவர்கள்.

உங்களின் பிரபல யோகாதிபதியாக இருக்கும் சனிபகவான் 3வது வீட்டிலே நின்று கொண்டிருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள்.

பிரபலங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ராசியிலேயே குரு பகவான் நின்று கொண்டிருப்பதனால் வேலைச்சுமை கூடிக்கொண்டே போகும்.

சோர்வு, களைப்பு வந்துநீங்கும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அருந்துங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உங்களுடைய ராசிநாதனாகிய புதன் 2வது வீட்டில் நின்று கொண்டிருப்பதால் இங்கிதமாக, இதமாகப் பேசி முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள்.

ஆனால், சூரியன் 2வது வீட்டில் நீசமாகி இருப்பதால் கண் வலிக்கும். முன் கோபத்தை தவிர்க்கப் பாருங்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை செலுத்துவதில் அலட்சியம் வேண்டாம்.

உங்களிள் பிரபல யோகாதிபதியாகிய சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களிலே சென்று கொண்டிருப்பதனால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.

புது வாகனமும் வாங்குவீர்கள். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களும் வாங்குவீர்கள். செவ்வாயின் போக்கு சரியில்லாததனால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். தாய் வழி உறவினர்களாலும் செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும்.

பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். பாகப் பிரிவினை விஷயத்திலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது.

சகோதரர்களுக்குள் சின்னச் சின்ன கருத்து மோதல்களெல்லாம் வரும். 6ம் இடத்திலே கேது நின்று கொண்டிருப்பதனால் பழைய வழக்கிலே நல்ல தீர்ப்பு கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்வதற்கு குறைத்த வட்டியில் கடன் உதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

12வது வீட்டிலே ராகு நின்று கொண்டிருப்பதனால் தூக்கம் குறையும். புண்ணியத் தலங்களுக்கெல்லாம் சென்று வருவீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

அரசியல்வாதிகளே! அநாவசிய பேச்சுகளை தவிர்க்கப் பாருங்கள். தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை காட்டுங்கள்.

மாணவர்களே! அறிவியல் பாடத்திலே அக்கறை காட்டுங்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். ஓவியம், இசை போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.

வியாபாரத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். உணவு வகைகள், பிளாஸ்டிக் பொருட்கள், துணி வகைகள், போர்டிங் வகைகளால் லாபம் அதிகமாகும்.

வாகனம், எரிபொருள் சம்மந்தப்பட்ட வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபம் அதிகரிக்கும்.

உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்களிம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மூத்த அதிகாரியிடமிருந்து சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சின்னச் சின்ன கூடுதல் சலுகைகளும் கிடைக்கும்.

கலைஞர்களே! கன்னடம், தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயம் அடைவீர்கள். சில நுணுக்கங்களையும் கற்றுக் கொள்வீர்கள்.

விவசாயிகளே! பழைய கடன் குறையும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். டிராக்டர் போன்றவை புதிதாக வாங்க வாய்ப்பிருக்கிறது. இந்த மாதம் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றுவதாக அமையும்.

ராசியான தேதிகள்

அக்டோபர் 21, 22, 23, 24, 30, 31 நவம்பர் 2, 3, 4, 5, 9, 11.

சந்திராஷ்டமம்

அக்டோபர் 17, 18ம் தேதி மதியம் 3.00 மணி வரை மற்றும் நவம்பர் 12ம் தேதி இரவு 8.30 மணி முதல் 13,14ம் தேதி வரை.

பரிகாரம்

பண்ருட்டிக்கு அருகேயுள்ள வடவாம்பலம் எனும் தலத்திலுள்ள ஆத்ம போதேந்திராள் ஜீவசமாதிக்கு சென்று வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

துலாம்

அல்லல்கள் வந்தாலும் கொள்கைகளை ஒருபோதும் மாற்றிக் கொள்ளாது எடுத்த காரியங்களை முடித்துக் காட்டும் திறமை படைத்த நீங்கள், கடலளவு அன்பு கொண்டவர்கள்.

உங்கள் ராசிநாதனான சுக்கிரன் சாதகமாக சென்று கொண்டிருப்பதால் அடிமனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தெள்ளத் தெளிவாக முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள்.

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். ஈகோ பிரச்னையும் குறையும். வீடு மாறுவீர்கள். மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும், வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

பழைய டிசைன் நகையை தந்து விட்டு புது டிசைனில் நகை வாங்கவும் வாய்ப்பிருக்கிறது. மனைவி, பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருப்பதை வாங்கித் தரவும் வாய்ப்பிருக்கிறது.

ராசிக்குள்ளேயே சூரியன் நீசம் பெற்று நின்று கொண்டிருப்பதனால் உடல் உஷ்ணம் அதிகமாகும். கண் எரிச்சல், காது வலி வந்து நீங்கும்.

எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. மூத்த சகோதர வகையில் கருத்து மோதல்கள் வரும்.

உங்கள் பாக்யாதிபதி புதன் சாதகமாக இருப்பதனால் பணப் புழக்கம் இருக்கும் ஆனால், ஏழரைச் சனியிலே பாதச்சனி இருப்பதனால் செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும்.

திடீர் பயணங்களும் உண்டு. கால் வலி, முதுகு வலி வந்து நீங்கும். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையொப்பம் இட வேண்டாம். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவிக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இளைய சகோதர, சகோதரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். எதிர்பார்த்து ஏமாந்துப்போன தொகை கைக்கு வரும். புறநகர் பகுதியில் வீட்டு மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். லாப வீட்டிலே ராகு நின்று கொண்டிருப்பதால் ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வர வாய்ப்பிருக்கிறது.

ஆனால் ஏழரைச்சனி இருப்பதனால் அதிக முதலீடுகளில் ஈடுபட வேண்டாம்.

அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

மாணவர்களே! பாதச்சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் அறிவியல், கணிதம் பாடங்களில் அலட்சியம் வேண்டாம் அக்கறைக் காட்டுங்கள். வகுப்பறையில் அரட்டை வேண்டாம்.

கூச்சமில்லாமல் ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

பெண்களே! சோம்பல் நீங்கும். நினைவாற்றல் கூடும். போட்டித்தேர்வு, முக்கிய தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். போட்டிகள் குறையும். பழைய வேலையாட்களை நீக்கி விட்டு கல்வித் தகுதி, அனுபவம் அதிகமுள்ள புதிய வேலையாட்களை சேர்ப்பீர்கள்.

ஏற்றுமதி, இறக்குமதி, துணி, கமிஷன் வகைகளால் லாபம் வரும்.

உத்யோகத்தில் ஒரு பக்கம் வேலைச்சுமை இருந்தாலும் மற்றொரு பக்கம் அதிகாரிகளின் ஆதரவு பெருகும். சின்னச் சின்ன சலுகைகளெல்லாம் கிடைக்கும்.

ஏழரைச்சனி நடைமுறையில் இருப்பதால் மறதியால் சில தவறுகள் நிகழக்கூடும். கவனமாக இருங்கள். சக ஊழியருடன் சலசலப்பு வரும். ஆனால் மூத்த அதிகாரி உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

கலைஞர்களே! தடைகளெல்லாம் நீங்கி புது வாய்ப்புகளும் தேடி வரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல தருணமும் கிடைக்கும்.

விவசாயிகளே! பூச்சித் தொந்தரவு குறையும். தண்ணீர் வசதியும் கிடைக்கும். மகசூல் பெருகும். பக்கத்து நிலத்துக்காரருடன் இருந்த பகை நீங்கும். இந்த மாதம் கடின உழைப்பில் இலக்கை எட்டிப்பிடிக்கும் மாதமாக அமையும்.

ராசியான தேதிகள்

அக்டோபர் 17, 23, 24, 25, 26, 28 நவம்பர் 2, 3, 4, 5, 7, 11, 12, 13.

சந்திராஷ்டமம்

அக்டோபர் 18ம் தேதி மதியம் 3.00மணி முதல் 19,20ம் தேதி மாலை5.30மணி வரை மற்றும் நவம்பர் 15ம் தேதி வரை.

பரிகாரம்

விழுப்புரத்திற்கு அருகேயுள்ள பரிக்கல் நரசிம்மரை தரிசித்து வாருங்கள். வயதானவர்களுக்கு செருப்பும், குடையும் வாங்கிக் கொடுங்கள்.

விருச்சிகம்

அனைத்துத் துறைகளிலும் வல்லர்களான நீங்கள், ஆணித்தரமாக வாதாடுபவர்கள். அதிபுத்திசாலித்தனமாக கேள்விக் கணைகள் தொடுத்து மற்றவர்களை விழிபிதுங்க வைப்பீர்கள்.

அக்டோபர் 25ம் தேதி முதல் உங்களுடைய ராசிநாதனாகிய செவ்வாய் உச்சம் அடைவதால் அழகு, ஆரோக்யம் கூடும். சுறுசுறுப்பாவீர்கள். தடைபட்ட வேலைகளெல்லாம் உடனே முடிவடையும்.

எதிர்ப்புகள் நீங்கும். ஏழரைச்சனியிலே ஜென்மச்சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. அவ்வப்போது உடம்பில் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

நீரிழிவு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. கவனமாக இருங்கள். எளிதில் செரிமானமாகக்கூடிய உணவை உட்கொள்ளுங்கள். யூரினரி இன்பெக்‌ஷன் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

தண்ணீர் அதிகம் அருந்துவது நல்லது. சுக்கிரன் சாதகமான வீடுகளிலே சென்று கொண்டிருப்பதனால் குடும்பத்தில் அடிப்படை வருமானம் உயரும்.

உங்கள் ராசிக்கு யோகாதிபதியாக இருக்கும் சூரியன் நீசமாகி 12வது வீட்டிலே மறைந்து கிடப்பதனால் செலவினங்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள்.

புதன் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் வெளிநாடு, வெளி மாநிலத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

விசா பிரச்னைகள் தீரும். 4வது வீட்டிலே கேது நின்று கொண்டிருப்பதால் சுபச் செலவுகள் கூடிக் கொண்டே போகும்.

அரசியல்வாதிகளே! தொகுதியில் செல்வாக்கு கூடும். எதிர்க்கட்சியின் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள்.

மாணவர்களே! படிப்பிலும் முன்னேறுவீர்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர் பாராட்டு கிடைக்கும்.

பெண்களே! நட்பு வட்டம் விரிவடையும்.

வியாபாரத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவீர்கள். கடையை மாற்றுவது, புது டிரேடிங் எடுப்பது, பங்குதாரர்களை மாற்றுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும்.

ஏழரைச்சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வேலையாட்களை அதிகம் கடிந்து கொள்ள வேண்டாம். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

உத்யோகத்தில் வேலைச்சுமை கூடிக் கொண்டே போகும். பத்தாம் இடத்தில் ராகு இருப்பதாலும், பத்துக்குரிய சூரியன் பன்னிரண்டாம் வீட்டில் மறைந்திருப்பதாலும் இட மாற்றங்கள் ஏற்படும்.

மூத்த அதிகாரிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள உங்கள் மீது பழி சுமத்துவார்கள். கவனமாக இருங்கள்.

கலைஞர்களே! இந்தி, மலையாளம் பேசுபவர்களால் ஆதாயம் பெறுவீர்கள். வயதில் குறைவான கலைஞர்கள் மூலமாக உங்களுக்கு புதுவாய்ப்புகள் வரும்.

விவசாயிகளே! ஏழரைச்சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பக்கத்து நிலத்துக்காரரிடம் பகை வேண்டாம். அனுசரித்துப் போவது நல்லது. மகசூல் பெருகும்.

மாற்றுப் பயிர் மூலமாக ஆதாயமடைவீர்கள். இந்த மாதம் தொட்டதெல்லாம் துலங்கும் மாதமாக உங்களுக்கு அமையும்.

ராசியான தேதிகள்

அக்டோபர் 17, 18, 19, 26, 27, 28 நவம்பர் 5, 6, 7, 8, 13, 14, 15.

சந்திராஷ்டமம்

அக்டோபர் 20ம் தேதி மாலை 5.30 மணி முதல் 21, 22ம் தேதி இரவு 9.00 மணி வரை.

பரிகாரம்

பழனி முருகப் பெருமானை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.

தனுசு

மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்யும் குணமுடைய நீங்கள், குற்றம் குறைகள் இருந்தாலும் சுற்றத்தாரை அனுசரித்து வாழக் கூடியவர்கள்.

3வது வீட்டிலே கேது நிற்பதால் தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்கள் மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பீர்கள்.

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் ராசிநாதனான பத்ததாவது வீட்டில் கேந்திராதிபத்ய தோஷம் அடைந்திருப்பதால் வேலைச்சுமை கூடிக் கொண்டே போகும்.

உங்களைப்பற்றி சிலர் தவறாக பேசிக் கொள்வார்கள். அதற்காக நீங்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். ஜாமீன், கேரண்டர் கையொப்பம் இட வேண்டாம்.

பணம் கொடுக்கல், வாங்கலிலே எச்சரிக்கையாக இருங்கள். முன் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

உணவுக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. உங்கள் பூர்வ புண்ணியாதிபதியாகிய செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் குழந்தை பாக்யம் உண்டு.

சுக்கிரன் சாதகமாக நின்றுக்கொண்டிருப்பதால் பழைய கடன் பிரச்னை கொஞ்சம் குறையும். ஷேர் மார்க்கெட் மூலமும் பணம் வர வாய்ப்பிருக்கிறது.

ஏழரைச்சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அநாவசியமான செலவுகளை குறைக்கப் பாருங்கள். திடீர் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும்.

உங்கள் பாக்யாதிபதி சூரியன் நீசமானாலும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் சவாலான விஷயங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அரசாங்கத்தாலும் ஆதாயம் உண்டாகும்.

அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடையே செல்வாக்கு கூடும். ஆனால், உங்கள் புகழை கெடுக்க சிலர் முயற்சி செய்வார்கள். அலைபேசியில் ரகசியங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.

மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். விளையாட்டிலும் ஆர்வம் அதிகரிக்கும். நொறுக்கு தீனிகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

பெண்களே! புதிய நண்பர்களை நம்பி பழைய நண்பர்களை இழந்து விட வேண்டாம். பெற்றோரை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

வியாபாரத்திலே கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் லாபம் அதிகமாகும். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னை குறையும்.

பங்குதாரர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கடையையும் விரிவுபடுத்துவீர்கள்.

உத்யோகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆனால், 10ம் இடத்தில் குரு நின்று கொண்டிருப்பதால் அவ்வப்போது வேலையில் நீடிப்போமா, இல்லையா என்ற சந்தேகம் வரும்.

மூத்த அதிகாரிகளும் உங்களை பாரபட்சமாக நடத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, கவனமாக இருங்கள். சக ஊழியர்களிடம் மூத்த அதிகாரிகளைப்பற்றி குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம்.

கலைஞர்களே! உங்களுடைய திறமைகளை மேலும் அதிகப்படுத்திக் கொள்ள பாருங்கள். சக கலைஞர்களால் மதிக்கப்படுவீர்கள்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை குறையும். தோட்டப் பயிர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். எண்ணெய் வித்துக்கள், பழ வகைகளாலும் லாபம் கிடைக்கும்.

இந்த மாதம் செலவுகள் ஒரு பக்கம் இருந்தாலும் அதையும் தாண்டி ஒரு படி முன்னேறும் மாதமாக அமையும்.

ராசியான தேதிகள்

அக்டோபர் 19, 20, 21, 28, 29, 30, 31 நவம்பர் 7, 8, 9, 15.

சந்திராஷ்டமம்

அக்டோபர் 22ம் தேதி இரவு 9.00மணி முதல் 23, 24ம் தேதி வரை.

பரிகாரம்

வேதாரண்யம் – திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள தகட்டூர் காசி பைரவரை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

மகரம்

மற்றவர்கள் பின் வாங்கும் செயல்களை தானாக முன்வந்து செய்யும் ஆற்றலுடைய நீங்கள், தன்னை மதியாதவர்களுக்கும் மறுக்காமல் உதவும் மனசு கொண்டவர்கள்.

உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியாக இருக்கும் சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் பயணம் செய்வதால் எல்லா விதத்திலும் உங்களுக்கு வெற்றி உண்டு.

மகிழ்ச்சி உண்டு. வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. உங்களுடைய ராசிநாதனான சனிபகவான் லாப வீட்டில் நின்று கொண்டிருப்பதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.

2வது வீட்டில் கேது நின்று கொண்டிருப்பதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியே சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. செலவுகளை கட்டுப்படுத்த நினைத்தாலும் கட்டுக்கடங்காமல் போகும்.

உங்களுடைய ராசிக்கு 12வது வீட்டிலே அமர்ந்து அலைச்சலையும், செலவினங்களையும், தூக்கமின்மையும் தந்து கொண்டிருக்கும் செவ்வாய் அக்டோபர் 25ம் தேதி முதல் உங்கள் ராசிக்குள் நுழைவதனால் வீண் செலவுகளும் குறையும்.

சகோதர, சகோதரிகளுக்குள் இருந்து வந்த கருத்து மோதல்களும் விலகும். செவ்வாய் ராசிக்குள் அமர்வதால் உடல் உஷ்ணமாகும். குளிர்ச்சி தரக்கூடிய காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களின் பாக்யாதிபதியாகிய புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஷேர் மூலமாக பணம் வரும். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகையும் கைக்கு வரும்.

எல்லா வகையிலும் மகிழ்ச்சி தங்கும். குருபகவான் உங்கள் ராசியை பார்த்துக் கொண்டேயிருப்பதால் பெரிய பதவியில் அமர்வீர்கள். சிலருக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளை பாக்யமும் கிடைக்கும். தந்தையாரின் உடல்நிலையும் சீராகும்.

அரசியல்வாதிகளே! கட்சியின் பெரிய பொறுப்புகளுக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிரிகளின் பலம் குறையும். மாணவர்களே! உங்களின் பொது அறிவுத்திறன் வளரும். வகுப்பாசிரியர் உங்களை பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

பெண்களே! உயர்கல்வியிலே தேர்ச்சி பெறுவீர்கள். போட்டி தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று புது வேலையில் சேரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும்.

சிலருக்கு திருமணம் கூடி வரும். நீங்கள் நினைத்ததைப் போல நல்ல வரன் அமையும்.

வியாபாரத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவீர்கள். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்து கொள்வீர்கள்.

வேலையாட்களை புதிதாக நியமிப்பீர்கள். பங்குதாரர்களையும் மாற்றி வலுவான பங்குதாரர்களை சேர்த்து வியாபாரத்தை வலுவாக்குவீர்கள்.

வங்கிக்கடன் உதவியும் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி வகைகள், உணவு, வாகனம் வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்யோகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆனால், எட்டாம் இடத்திற்குரிய சூரியன் பத்தாவது வீட்டில் அமர்ந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும்.

இடமாற்றம் இருக்கும். அதிகாரிகளைப் பற்றியோ அல்லது அலுவலகத்தைப் பற்றியோ வெளியே சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். சகஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். மூத்த அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கலைஞர்களே! பெரிய நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்புகள் கிடைக்கும்.

விவசாயிகளே! மகசூல் பெருகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பக்கத்து நிலத்துக்காரர்களிடம் இருந்து வந்த பகை குறையும். இந்த மாதம் வசதி, வாய்ப்புகளை அதிகபடுத்தும் மாதமாக அமையும்.

ராசியான தேதிகள்

அக்டோபர் 21, 22, 23, 24, 30, 31 நவம்பர் 2, 3, 9, 11, 12, 13.

சந்திராஷ்டமம்

அக்டோபர் 25, 26, 27ம் தேதி காலை 10.30மணி வரை.

பரிகாரம்

சென்னை – மயிலாப்பூர் மாதவப் பெருமாளை தரிசித்து வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன்றளவு உதவுங்கள்.

கும்பம்

எடுத்துக்காட்டுகளுடன் பேசி எதிரில் இருப்பவர்களை கவரக் கூடிய நீங்கள், எல்லோருக்கும் நல்லதே நினைப்பவர்கள். நிர்வாகத் திறமை அதிகமுள்ளவர்கள்.

உங்கள் ராசிநாதன் சனிபகவான் பத்தாவது வீட்டில் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால் எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அதை சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்கு கிடைக்கும்.

உங்களின் பிரபல யோகாதிபதியாகிய சுக்கிரன் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

உங்களின் பூர்வ புண்ணியாதிபதியாகிய புதனும் சாதகமாக சென்று கொண்டிருப்பதால் மகனுக்கு வேலை கிடைக்கும், மகளுக்கு திருமணம் முடிய வாய்ப்பிருக்கிறது.

ஏழாவது வீட்டில் ராகு நின்று கொண்டிருப்பதால் மனைவிக்கு உடல்நிலை பாதிக்கும். மனைவிக்கு வேலைச்சுமையும் இருந்து கொண்டே இருக்கும்.

உங்களுடைய ராசிக்குள்ளேயே கேது நின்று கொண்டிருப்பதால் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். செவ்வாயும் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இருப்பதால் சகோதர, சகோதரிகள் உதவுவார்கள்.

ஆனால், அக்டோபர் 25ம் தேதி முதல் 12ம் வீட்டில் மறைவதால் மற்றவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். பணம் வாங்கித் தருவதிலும் குறுக்கே நிற்க வேண்டாம்.

அரசியல்வாதிகளே! ஆடம்பரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பொதுமக்கள் உங்களை உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். வேடிக்கையான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.

மாணவர்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பெற்றோருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். ஓவியம், இசைப் போட்டிகளிலும் முன்னேறுவீர்கள்.

பெண்களே! கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உணவுக் கட்டுப்பாடு தேவை. உடல் பருமனாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ராசிக்குள் கேது நிற்பதால் சிலர் உங்களை தவறு செய்ய தூண்டுவார்கள்.

வியாபாரத்தில் இந்த மாதம் கூடுதல் லாபம் கிடைக்கும். இரும்பு, கெமிக்கல், பெயிண்ட் வகைகளாலும் லாபம் அதிகமாகும். 8வது வீட்டில் குரு மறைந்து நிற்பதனால் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டியது வரும்.

உத்யோகத்திலே உங்கள் செல்வாக்கு உயரும். புது சலுகைகளும் கிடைக்கும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் பேசுவார்கள். பதவி, உயர்வுடன் கூடிய இடம்மாற்றத்தையும் எதிர்பார்க்கலாம்.

கலைஞர்களே! சின்ன சின்ன வாய்ப்புகளாக இருந்தாலும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.

விவசாயிகளே! மரப்பியர்களால் லாபம் உண்டு. பூச்சித் தொல்லை, எலித் தொல்லை தோட்டப்பயிர்களில் வந்து போகும். பணப் பற்றாக்குறை இருக்கும்.

இந்த மாதம் செலவுகளையும் அலைச்சல்களையும் ஒரு பக்கம் தந்தாலும் மற்றொரு பக்கம் பணவரவையும், செல்வாக்கையும் தருவதாக அமையும்.

ராசியான தேதிகள்

அக்டோபர் 17, 18, 19, 23, 24, 26 நவம்பர் 2, 3, 4, 5, 11, 12, 13, 14.

சந்திராஷ்டமம்

அக்டோபர் 27ம் தேதி காலை 10.30மணி முதல் 28,29ம் தேதி இரவு 8.45மணி வரை.

பரிகாரம்

கடலூர் திருவஹிந்திரபுரம் ஹயக்ரீவரை தரிசித்து வாருங்கள். மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.

மீனம்

எதிரிக்கும் நல்லதே நினைக்கும் எண்ணங்கொண்ட நீங்கள், எப்போதும் ஒற்றுமை உணர்வுக்கு உரம் அளிப்பவர்கள். உங்களுடைய ராசிநாதன் உங்களுடைய ராசியை பார்த்துக் கொண்டேயிருப்பதால் சுறுசுறுப்பாவீர்கள்.

தடைகளெல்லாம் விலகும், தொட்டதெல்லாம் துலங்கும். பணவரவும் திருப்திகரமாக இருக்கும். கல்யாண முயற்சிகளும் பலிதமாகும்.

நாடாளுபவர்களின் நட்பும் கிடைக்கும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புகழும் கௌரவமும் ஒரு படி உயரும்.

ஆறாம் வீட்டிற்குரிய சூரியன் 8வது வீட்டில் மறைந்து கிடப்பதால் திடீர் யோகம் உண்டு. முடியாது என்று நினைத்திருந்த காரியங்களெல்லாம் முடிவடையும்.

ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வர வாய்ப்பிருக்கிறது. ராகு பகவான் 6வது வீட்டில் நின்று கொண்டிருப்பதால் பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும்.

சனிபகவான் 9வது வீட்டிற்குள்ளேயே தொடர்வதால் தந்தையாருக்கு சின்னச் சின்ன மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

தந்தை வழி உறவினர்களுடனும் கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் தன, பாக்யாதிபதியாக இருக்கும் செவ்வாய் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் தந்தையாரின் உடல்நிலை சீராகும்.

எல்லோரையும் சமாளிக்கக்கூடிய சக்தி கிடைக்கும். சிலருக்கு புகழ் பெற்ற நிறுவனங்களில் சென்று வேலைக்கு சேரக்கூடிய அமைப்பு உண்டு.

சகோதரர்கள் அரவணைப்பாக இருப்பார்கள். வீடு வாங்குவது விற்பது நல்ல விதத்தில் முடிவடையும். புதுத்தொழில் தொடங்குவீர்கள். புது முதலீடுகளுக்கு வங்கிக்கடன் உதவி கிடைக்கும்.

கேது 12வது வீட்டில் நிற்பதால் ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள். முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்தி பிரார்த்தனையை முடிப்பீர்கள்.

அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். மாநில அளவில் புது பதவிகள் கிடைக்கும். மக்கள் மத்தியிலும் செல்வாக்கு நிலைக்கும்.

மாணவர்களே! போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். பரிசும், பாராட்டும் கிடைக்கும். உங்களுடைய மதிப்பு, மரியாதை கூடும். சக மாணவர்கள் மத்தியில் பெருமையாகப் பேசப்படுவீர்கள்.

கன்னிப் பெண்களே! திருமணம் கூடி வரும். அயல்நாட்டு வேலையை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு அங்கு செல்லக்கூடிய அமைப்பும் உண்டாகும்.

வியாபாரத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவீர்கள். நல்ல அனுபவமிக்க வேலையாட்களை கொண்டு வருவீர்கள். வேலையாட்கள் ஆர்வமுடன் வேலை பார்ப்பார்கள்.

பங்குதாரர்களும் உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள். ரியல் எஸ்டேட், மருந்து, கெமிக்கல், எலக்ட்ரிகல், போர்டிங், லாட்ஜிங் வகைகளால் ஆதாயம் உண்டாகும்.

உத்யோகத்திலே செல்வாக்கு அதிகரிக்கும். பெரிய பொறுப்பு, பதவியில் அமர்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கிடைக்காமல் போன பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இப்போது எதிர்பார்க்கலாம்.

ஒரு சிலருக்கு வேறு நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலையும் கிடைக்கும்.

கலைஞர்களே! கோபத்தைத் தவிர்த்து விடுங்கள். சக கலைஞர்களையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உங்களுடைய படைப்புகளுக்கு விருதுகள் கிடைக்கும். புது வாய்ப்புகள் தேடி வரும்.

விவசாயிகளே! பக்கத்து நிலத்தையும் வாங்குவீர்கள். மகசூல் பெருகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. மகளுக்கு திருமணம் முடியும். ஆகமொத்தம் இந்த மாதம் சாதித்துக் காட்டும் மாதமாக உங்களுக்கு அமையும்.

ராசியான தேதிகள்

அக்டோபர் 17, 19, 21, 22, 25, 26, 28 நவம்பர் 4, 5, 6, 7, 9, 13, 14.

சந்திராஷ்டமம்

அக்டோபர் 29ம் தேதி இரவு 8.45மணி முதல் 30, 31 நவம்பர் 1ம் தேதி காலை 8.30மணி வரை.

பரிகாரம்

சிதம்பரத்திற்கு அருகேயுள்ள புவனகிரி ராகவேந்திரர் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

524
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]